அவள் நம்பிக்கைகள் - 54 தாய்ப்பாலூட்டல்: சவால்களும் தீர்வுகளும்!

அவள் நம்பிக்கைகள் - 54 தாய்ப்பாலூட்டல்: சவால்களும் தீர்வுகளும்!

குழந்தைக்கு தாய் அமுதூட்டுவது மிகவும் இயல்பான நிகழ்வு. ஆனால் அதில் தாயும் சேயும் எதிர்கொள்ளும் சில சவால்கள் தாய்ப்பாலூட்டலை தடுமாற்றத்துக்கு உள்ளாக்குகின்றன. அமுதூட்ட அன்னை தயாராக இருந்தாலும், அவரது காம்புகளில் விரிசல், மார்பகங்களில் வலி, உள்ளடங்கிய காம்பு, பால் கட்டிக் கொள்வது, சீழ் கோர்த்தல் என எதிர்பாரா சவால்கள் காத்திருக்கக் கூடும்.

குழந்தை சார்ந்தும் இந்த சவால்கள் எழுவதுண்டு. தொடர்ந்து அழுது கொண்டே இருப்பது, பால் பற்றாமல் போவது அல்லது தொடர்ந்து பால் குடித்துக் கொண்டே இருப்பது போன்ற குழந்தைக்கான சவால்கள் இதில் அடங்கும்.

அமுதூட்டலில் தாய் மற்றும் சேய்க்கு எழும் சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் அலசப் போகிறது இந்த வார 'அவள் நம்பிக்கைகள்'!

வலி, வெடிப்பு, விரிசல் -வேதனைகள்

முதலில் காம்புகளில் வலி, வெடிப்பு மற்றும் விரிசலுடன் கூடிய காயம் பற்றி தெரிந்து கொள்வோம். பாலூட்டும் தாய்மார்கள் பெரும்பாலானோருக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினை, சமயங்களில் குழந்தைக்குப் பாலூட்டுவதையே நிறுத்திவிடும் அளவிற்கு சென்றுவிடுகிறது. உண்மையில் குழந்தை மார்பகங்களை முழுமையாக கவ்விப் பிடிக்காமல், காம்புகளை மட்டுமே மேலோட்டமாகப் பிடிப்பதால் (nibble) ஏற்படும் பாதிப்புதான் காம்புகளில் ஏற்படும் இந்த வலி மற்றும் விரிசல்.

Latching எனும் குழந்தையின் முழுமையான மற்றும் ஆழமான கவ்வுதல் முறை, தாயின் காம்புகளில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கிறது என்றாலும், அப்படி பாதிப்பு எதுவும் வந்துவிட்டால் இந்த விரிசலில் வலி, இரத்தக்கசிவு, காம்புக் காயங்களில் கிருமித்தொற்று என அடுத்தடுத்த பாதிப்புகளும் ஏற்படுகிறது. 

இதற்கான தீர்வுகளாக, விரிசல் ஏற்பட்ட காம்புகளில் பால் புகட்டும் நேரத்தைக் குறைப்பது, பாலைக் கறந்து குழந்தைக்குப் புகட்டுவது, காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை அணிவது, மருத்துவ ஆலோசனையுடனான வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக்குகள் மற்றும் மேலே பூசப்படும் களிம்புகள் ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன. Nipple shield எனும் செயற்கை காம்பு இதில் பயனளிக்காது என்பதுடன் குழந்தையின் பிணைப்பையும் இந்த ஷீல்ட் குறைத்துவிடுகிறது.

உள்ளடங்கிய காம்புகள்

பொதுவாக, பிரசவித்த அன்னையின் காம்புகள் சிறிதாகவோ தட்டையாகவோ இருந்தால்கூட, குழந்தை தானாகவே சமாளித்துக் கொண்டு, தாயின் காம்பினைக் கவ்விப் பிடித்து பாலைக் குடித்துவிடும். அப்படி இல்லாதபோது, கைவிரல்கள் கொண்டு காம்புகளை வெளியே இழுக்கும் 'ஹாஃப்மேன்' நுட்பத்தை தாய்மார்கள் பயன்படுத்தலாம்.

என்றாலும் inverted nipple எனும் முற்றிலும் உள்ளடங்கிய காம்புகளுக்கு மட்டும், அவற்றை வெளிக்கொணரும் 'சிரிஞ்ச் டெக்னிக்' முறையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டு, பாலூட்டும் முன்னர் ஒவ்வொரு முறையும் அதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

அதாவது 10 அல்லது 20 மிலி சிரிஞ்சின் முன்பக்கத்தை கத்தரித்து, பிஸ்டனை அதில் செலுத்தி, உள்ளடங்கிய காம்பை சிரிஞ்சின் பின்பக்கம் கொண்டு மென்மையாக வெளிக்கொணரும் முறை இது. கர்ப்பகாலத்தில் மார்பகப் பராமரிப்பின் அவசியமும் இங்கு நமக்குப் புரிகிறது. இதிலும் நிப்பிள் ஷீல்டுகள் எனும் செயற்கை காம்புகள் பயனளிக்காது என்பதுடன், குழந்தை கவ்வும் நேரடி நரம்புத் தூண்டல்கள் இங்கு இல்லாததால் பால் சுரப்பு முற்றிலும் நின்றுவிடும் வாய்ப்புகளும் இதில் உள்ளது.

அதிகம் சுரப்பதும் பால் கட்டிக்கொள்வதும்

பிரசவித்த முதல் மூன்று நாட்கள் வெறும் நீராக குறைந்த அளவு மட்டுமே வெளிவரும் தாய்ப்பால், ஓரிரு வாரங்களில் குழந்தையின் reflexes மற்றும் தாயின் ஹார்மோன்கள் உதவியுடன் நன்கு சுரக்கத் தொடங்குகிறது. தாயின் மனநிலையும் குழந்தையின் பந்தமும் ஒன்றுசேர்ந்து, பால்சுரப்பை இன்னும் அதிகரிக்கிறது.

தாய் ஒருபக்க மார்பில் பால் புகட்டும்போதே மறுபக்க மார்பகத்தில் தன்னிச்சையாக பால் சுரந்து வெளிவருவதும், அதிகப்படியான பால் கட்டுவதும் நிகழ்கிறது. பொதுவாக, லேசான வெந்நீர் ஒத்தடம், மார்பக மசாஜ், கட்டிய பாலைக் கறந்தபின்னர் புகட்டுவது போன்றவை இதற்கு உதவுகிறது. அதேசமயம் உணவுகளால் தான் பால் அதிகம் சுரக்கிறது என, சத்துகள் எதுவுமற்ற பத்திய சாப்பாடு பிரசவித்த பெண்ணை பலவீனமாக்கிவிடும் என்பதை உடனிருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த பால் கட்டுதல் மற்றும் வலியானது சமயங்களில் காம்பு வெடிப்பு மார்பகங்களில் நோய்த்தொற்று ஏற்படுவதாலும் காணப்படும். Mastitis, Breast Abscess என அழைக்கப்படும் இந்த மார்பகங்களில் சீழ் கோர்த்தல் பொதுவாக வலி மட்டுமன்றி குளிர் காய்ச்சல், அந்த இடத்தில் வெப்பம், பால் அடைத்து வெளிவராமல் இருப்பது போன்ற அறிகுறிகளுடனும் காணப்படும்.

மருத்துவ ஆலோசனை அவசியம் தேவைப்படும் இந்த சீழ் கோர்த்தலில், ஸ்கேனிங் உதவியுடன் சீழ் கோர்த்ததை ஊசி கொண்டு வெளியே எடுப்பது (scan guided aspiration) அல்லது அறுவை சிகிச்சையை (incision & drainage) மருத்துவர் பரிந்துரைக்கலாம். அத்துடன் ஆன்டிபயாடிக்குகள் மற்றும் வலி நிவாரணிகளும் இங்கு அவசியமாகிறது. சீழ் வெளியேற்றப்படும் வரை ஆரோக்கியமான மார்பில் பால் புகட்டுவது நல்லது..

குழப்பம் அளிக்கும் குழந்தையின் அறிகுறிகள்

இப்படி தாய்க்கு ஏற்படும் சவால்கள் ஒருபக்கம் என்றால் குழந்தையின் சில அறிகுறிகளும் குழப்பத்தைத் தரக்கூடும்..

குழந்தை காரணமின்றி தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பது, பால் பற்றாக்குறை என்ற எண்ணத்தை தான் அனைவருக்கும் கொடுக்கிறது.

உண்மையில், குழந்தைக்குத் தெரிந்த ஒரே மொழி அழுகை தான்.. சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், குளிர், வெப்பம், காதுவலி, வயிற்று வலி, காய்ச்சல் என எந்தவொரு அசௌகரியம் ஏற்பட்டாலும் ஏன் தூக்கத்திற்காகக் கூட குழந்தை தொடர்ந்து அழக்கூடும். குழந்தை குறைந்தபட்சம் ஒருநாளில் பத்து முறையாவது பால் குடிப்பது, பால் குடித்த பின் நன்கு உறங்குவது, ஒருநாளில் ஆறு முதல் எட்டு முறை வரை சிறுநீர் கழிப்பது, அதன் எடை கூடி வருவது ஆகியன தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறது என்பதன் அறிகுறிகளாகும். அதேசமயம் குறைந்த அளவு அதுவும் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல், எடை கூடாமல் இருத்தல் ஆகியன பால் பற்றாக்குறையை குறிக்கும்.

மேலும் குழந்தை தொடர்ந்து அழும்போது நிலை மாற்றி பால் தருவது, தோளில் தட்டிக் கொடுப்பது, லேசாக வயிற்றை நீவுவது போன்றவை பயனளிக்கும் என்றாலும் க்ரைப் வாட்டர், வசம்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அடுத்து பால் அருந்திக் கொண்டே இருப்பது.. Cluster Feeding என அழைக்கப்படும் இந்த தொடர் பால் அருந்துதல், குழந்தை பிறந்த ஓரிரு வாரங்களில், குறிப்பாக மாலைப் பொழுதுகளில் காணப்படும் என்றாலும், இது இயல்பான ஒன்றுதான் என்பதால் அச்சம்கொள்ளவோ, பால் பற்றாக்குறை என புலம்பவோ தேவையில்லை.

அடுத்து, சில குழந்தைகளில் காணப்படும் oral thrush எனப்படும் கிருமித்தொற்று. உதடுகள் மற்றும் நாக்கு சிவந்து அவற்றின் மேல் வெண்மையான படலம் ஒட்டியிருக்கும் இந்த பூஞ்சைத் தொற்று பொதுவாக புட்டிப்பால் தரும் குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது என்றாலும் சமயங்களில் தாய்ப்பால் தரும் குழந்தைகளிடமும் நோயெதிர்ப்புத் திறன் குறைவதால் ஏற்படக்கூடும். மருத்துவ ஆலோசனையுடன் மேல் தடவும் மருந்துகளும் முறையான தாய்ப்பாலும் இதன் தீர்வுகளாகும்..

இவற்றுடன் ஒட்டிய நாக்கு, பிளவுபட்ட உதடு அல்லது மேலண்ணம் போன்ற பிறவிக் குறைபாடுகளில் தாய்ப்பால் தருவது பெரும் சவாலாக இருக்கும் என்றாலும் அதற்கான முறையான பயிற்றுவித்தலும் வழங்கப்படும்.

ஆக, பிறந்த குழந்தைக்கு மூன்று தேவைகள் மட்டுமே உள்ளன. தனக்கான உணவு, தனது தாயின் வெப்பமான அரவணைப்பு, தாயிடமிருந்து பெறப்படும் பாதுகாப்பு உணர்வு ஆகிய மூன்றையும் தாய்ப்பால் ஒருங்கே அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தாய்ப்பாலூட்டலில் வரும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனது குழந்தைக்கு முழுமையாகப் பாலூட்டுவதில் உள்ளது தாய்மைக்கான முழுமையான இலக்கணம் என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' முற்றுப் பெறுகிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in