`இது கனவு மாதிரி இருக்கு; முதல்வருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது'- ஆவடி சிறுமியின் தாயார் கண்ணீர்

`இது கனவு மாதிரி இருக்கு; முதல்வருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது'- ஆவடி சிறுமியின் தாயார் கண்ணீர்

"முதல்வர் என்னுடைய குழந்தையை சரி பண்ணியிருக்கிறார். ரொம்ப ரொம்ப நன்றி. முதல்வருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது" என்று ஆவடி சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த ஸ்டிபன்ராஜ்- சௌபாக்கியா தம்பதியின் 9 வயது மகள் தான்யா. அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தானியாவுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை. நாட்கள் செல்லச் செல்ல தானியாவின் முகம், வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது. இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து, திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவர்கள் சிறுமி தானியாவுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தான்யாவுக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் தானியா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் நேற்றிரவு சிறுமியின் தாயாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். அப்போது, சிறுமியின் தாயார் கண்ணீருடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாயார் சௌபாக்கியா, "நீங்க பயப்டாதீங்க. தானியா நல்லபடியாக வந்துவிட்டாள். தானியாவை பார்க்க நான் கண்டிப்பாக வருவேன் என்று முதல்வர் சொன்னார். எனக்கு இது கனவு மாதிரி இருக்கிறது. என்னுடைய குழந்தையை உடனே பார்த்து இந்த அளவுக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்துவிட்டார்கள்.

நான் ஆறரை ஆண்டுகளாக எத்தனையோ கோயில், குளத்துக்கெல்லாம் போனேன். யார் எங்கு போகச் சொன்னாலும் என்னுடைய மகனை வயிற்றில் வைத்திருந்தபோதுகூட மகளுடைய சிகிச்சைக்காக போனேன். முதல்வர் என்னுடைய குழந்தையை சரி பண்ணியிருக்கிறார். ரொம்ப ரொம்ப நன்றி. முதல்வருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது" என்று கண்ணீர் மல்க கூறினார். அப்பாது, அமைச்சர் சா.மு.நாசர் உடனிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in