நள்ளிரவில் இளம்பெண்ணை பதறவைத்த ஆட்டோ டிரைவர்: சாலையில் குதித்து உயிர் தப்பிய பயங்கரம்

நள்ளிரவில் இளம்பெண்ணை பதறவைத்த ஆட்டோ டிரைவர்: சாலையில் குதித்து உயிர் தப்பிய பயங்கரம்

கோவையில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரைவரிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் ஆட்டோவில் இருந்து குதித்ததால் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோட்டைப் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (பெயர் மாற்றம்), 22 வயதான இவர், கோவையில் பல மாதங்களாக தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி திருப்பூர் சென்ற சுகன்யா, இரவில் கோவை திரும்பி உள்ளார். நள்ளிரவு 12.30 மணி அளவில் பீளமேட்டில் இறங்கியுள்ளார். அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்ல ரபிடோ செயலில் ஆட்டோவை புக் செய்துள்ளார். அங்கு வந்த ஆட்டோவில் ஏறி சுகன்யா சென்றுள்ளார். அப்போது, திடீரென சுகன்யாவிடம் ஆட்டோ டிரைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, ஆட்டோவை நிறுத்துமாறு அலறியுள்ளார்.

ஆனால், ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் ஆட்டோவில் இருந்து திடீரென குதித்தார் சுகன்யா. இதில், தலை, கால்களில் சுகன்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே தன் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் சுகன்யா. விரைந்து வந்த நண்பர்கள், சுகன்யாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சுகன்யாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டது உட்கடத்தை சேர்ந்த சாதிக் என தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

நள்ளிரவில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் ஆட்டோ டிரைவர் அத்துமீறிய சம்பவம் கோவையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in