மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர், வீட்டின் மேற்கூரை விழுந்து பெண் உயிரிழப்பு: சென்னையில் நடந்த சோகம்

ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன்
ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன்

சென்னையில் தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி ஒருவரும், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தனர்.

சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 25-வது தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன்(55). இவர் இன்று காலை வீட்டு அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக பக்தவச்சலம் காலனி 18-வது தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது. அந்த மழை நீரில் தேவேந்திரன் நடந்து சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவலறிந்த எம்.கே.பி நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தேவேந்திரனின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பெரியமேடு போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் பெண் காவலரின் தந்தை சுப்பிரமணி நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை வைப்பதற்காக பந்தல்போடும் ஊழியர் மோகன் என்பவர் ஷாமினார் பந்தல் போட்டு அருகிலிருந்த மின்சார பெட்டியில் இருந்து மின்சாரம் எடுத்து மின்விளக்குகள் பொருத்தி உள்ளார். இதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு மழைநீரில் நடந்து சென்ற தேவேந்திரனின் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உயிரிழந்த தேவேந்திரனின் மகன் கௌதம் அளித்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் மரணம் நிகழ்தல் என்ற பிரிவின் கீழ் எம்கேபி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியில் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சாந்தி என்பவர் உயிரிழந்தார்.

சாந்தி
சாந்தி

சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் காலனியில் வசிப்பவர் லதா. இவரது வீட்டில் சாந்தி(48) என்ற பெண் தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சாந்தி வீட்டு முறைவாசல் செய்வதற்காக முற்றத்தில் இருந்த பம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தார். நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், சாந்தி தண்ணீர் அடித்து கொண்டிருந்த போது வீட்டின் மாடியில் இருந்த கழிவறை சுவர் மற்றும் பால்கனி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சாந்தி படுகாயமடைந்தார். சாந்தி அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சாந்தியை மீட்டு உடனே 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் அளித்தனர்.

இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை
இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை

ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையில் படுகாயமடைந்த சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தான் ரத்தம் போக்கு ஏற்பட்டு சாந்தி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸில் வந்து பெண் மருத்துவர், சாந்தி உயிரிழந்ததை உறுதி செய்த நிலையில், அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக புளியந்தோப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in