`செல்போன் பேசிகிட்டே டிரைவர் அங்கிள் ஆட்டோ ஓட்டினார்'- பதறவைக்கும் மாணவர்களின் வாக்குமூலம்

விபத்து
விபத்து

திருநெல்வேலியில் பள்ளிக்கூடத்திற்கு ஆட்டோவில் சென்ற எல்.கே.ஜி மாணவன் பலியான சம்பவத்தில் ஆட்டோ டிரைவரின் அஜாக்கிரதைதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் ஆட்டோ டிரைவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஊத்துப்பாறையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் செல்வநவீன்(5) பாளையங்கோட்டை கட்டபொம்மன்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்தார். செல்வநவீன் உள்பட 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று பள்ளியை நோக்கி, ஆட்டோ சென்று கொண்டிருந்தது. நட்டார் குளத்தைச் சேர்ந்த ராஜ் என்பவர் ஆட்டோவை ஓட்டிவந்தார். இந்த ஆட்டோவை, அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரே ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆட்டோ அனவரதநல்லூர் பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் செல்வநவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். முகிலா, நவீன்குமார் என்னும் இரு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் ஆட்டோ டிரைவர் ராஜ் தப்பியோடிவிட்டார். போலீஸார் ஆட்டோவில் பயணித்த மற்றக் குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ‘டிரைவர் அங்கிள், செல்போனில் பேசிக்கொண்டே அலட்சியமாக ஆட்டோ ஓட்டினார். பேசியபோது செல்போன் கீழே விழுந்தது. இதனை பிடிக்க முயன்றபோது ஆட்டோ கவிழுந்துவிட்டது’ என பதறவைக்கும் வாக்குமூலம் அளித்துள்ளனர் மாணவர்கள்.

இதனைத்தொடர்ந்து அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்துதல், கவனக்குறைவாக ஓட்டுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய மூன்றுபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in