`நகை, பணத்தை என்னிடம் கொடுங்கள்; நீங்கள் வந்தபிறகு தருகிறேன்'- நம்பிக் கொடுத்த மூதாட்டியை அதிர வைத்த ஆட்டோ டிரைவர்

ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்
ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்

முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்த மூதாட்டி கவனத்தை திசை திருப்பி ஆட்டோவில் அழைத்து சென்று தங்க நகை மற்றும் 44 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா பகுதியை சேர்ந்தவர் சரோஜா (80).இவர் அதே பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள அரசு அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை வழங்கி வருவதால், மாதம் ஒருமுறை திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்து முதியோர் உதவித்தொகை பெற்று செல்வது வழக்கமாக கொண்டிருந்தார்.

இதேபோல் கடந்த வாரம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக சென்னை அமைந்தகரைக்கு வந்த மூதாட்டி உதவி தொகை பெற்ற பின்பு அருகில் உள்ள நகைக்கடை வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் மூதாட்டியிடம் நைசாக பேசி அருகில் உள்ள மார்வாடி வீட்டில் இலவச சேலை வழங்குவதாகவும் உங்களை அங்கு அழைத்து செல்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றார். பின்னர் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் மூதாட்டியை இறக்கிவிட்டு நகையுடன் சென்றால் புடவை கிடைக்காது, ஆகையால் நகை, பணத்தை பையில் வைத்து என்னிடம் கொடுங்க, நீங்கள் வந்த பிறகு அதனை கொடுத்து விடுவதாக கூறினார். இதனை நம்பி மூதாட்டி சரோஜா 3 சவரன் தங்க செயின், 44 ஆயிரம் பணத்தை பையில் போட்டு ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு சென்றார். ஆட்டோ ஓட்டுநர் காண்பித்த வீட்டில் யாரும் புடவை கொடுக்கவில்லை. இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்து கொண்ட மூதாட்டி உடனே வெளியே வந்து பார்த்த போது ஆட்டோ ஓட்டுநரை இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது தொடர்பாக மூதாட்டி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சோழவரம் எடப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்(40) மூதாட்டி கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சுந்தரை கைது செய்து நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான சுந்தர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சுந்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in