காந்திக்கு மரியாதையை செலுத்துவது பாக்கியம்: சபர்மதி ஆசிரமத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திற்கு வருகை தந்த அவர், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது முதல் இந்திய பயணமாக அகமதாபாத் நகரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கி நேராக மகாத்மா காந்தியின் இல்லமும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையதுமாகிய சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரதமர் அல்பானீஸை விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றார்.

காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர், "அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தியின் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துவது ஒரு உண்மையான பாக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் பகிர்ந்துள்ள அட்டவணையின்படி, ஆஸ்திரேலிய பிரதமர் இன்று மாலை ராஜ்பவனில் ஹோலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். பிரதமர் நரேந்திர மோடி இரவு 8 மணியளவில் அகமதாபாத் வருவார். நாளை ஆகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளை இரு நாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in