சுவரில் துளைபோட்ட கொள்ளையர்கள்; அதிகாலையில் அடித்த அலாரம்: பதறிய நகைக்கடை ஓனர்

சுவரில் துளைபோட்ட கொள்ளையர்கள்; அதிகாலையில் அடித்த அலாரம்: பதறிய நகைக்கடை ஓனர்

நகைக்கடையின் சுவரை உடைத்த கொள்ளையர்கள், அலாரம் அடித்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நகை திருடப்படாமல் இருந்ததால் கடை உரிமையாளர் நிம்மதியடைந்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள குன்னத்தூர் நால்ரோட்டில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணிக்கு நகைக்கடையில் இருந்து அலாரம் அடித்திருக்கிறது. இது குறித்து அங்கிருந்த காவலாளி, நகைக்கடை உரிமையாளர் பரமசிவத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். கடைக்கு விரைந்து வந்த பரமசிவம், நகைக்கடையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நகைக்கடையின் சுவரை உடைத்து மர்ம நபர்கள் துளையிட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரமசிவம் உடனடியாக பெருந்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, நகைக்கடையின் பின்புறம் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக நகைக்கடைக்குள் புகுந்திருப்பது தெரிய வந்தது. மேலும், அலாரம் அடித்த உடனே அந்த கொள்ளை கும்பல் தப்பி சென்றிருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லாததால் கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

நகைக்கடையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அலாரம் அடித்ததால் ஒட்டம் பிடித்ததால் நகைகள் தப்பியது. நகைக்கடையின் சுவரை உடைத்து கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in