
காஞ்சிபுரம் அருகே தனியார் ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் திம்மராஜம் பேட்டை என்ற இடத்தில் ஹிட்டாச்சி என்ற தனியார் நிறுவன ஏடிஎம் ஒன்று உள்ளது. பாதுகாவலர் இல்லாத இந்த ஏடிஎம் மையத்தைப் பற்றி நோட்டம் இட்டு தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இன்று அதிகாலை ஏடிஎம் மையத்துக்குள் கடப்பாரையுடன் நுழைந்தனர். ஏ. டி.எம் எந்திரத்தை தாங்கள் கொண்டுவந்த கடப்பாரையால் உடைத்தனர். பெரும்பகுதி உடைக்கப்பட்ட நிலையில் பணம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக ஆட்கள் வருவதைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு வட மாநில கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.