
சிவகாசி ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை பட்டப்பகலில் கடத்த முயன்ற பெண் பணியாளர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் ரேஷன் கடை உள்ளது, இங்கு பொறுப்பாளராக மும்தாஜ் பேகம் பணியாற்றி வருகிறார். இக்கடை அருகே சரக்கு வாகனம் இன்று நிறுத்தப்பட்டு கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டன. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மும்தாஜ் பேகம் மற்றும் டிரைவரிடம் வாக்கு வாதம் செய்தனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிவகாசி நகர் போலீஸார் அங்கு வந்தனர். அவர்கள் கடையிலிருந்து கடத்த முயன்ற 2 டன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு இந்த ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக பொறுப்பாளர் மும்தாஜ் பேகம், வேன் டிரைவர் கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.