5 மாத பெண் குழந்தையை விற்க முயற்சி: தாய், பாட்டி உள்பட 4 பேர் சிக்கினர்

5 மாத பெண் குழந்தையை விற்க முயற்சி: தாய், பாட்டி உள்பட 4 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய முயன்ற குழந்தையின் தாய், பாட்டி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக 5 மாதக் குழந்தையை விற்பனை செய்ய முயல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல்கிடைத்தது. இதன் அடிப்படையில் எஸ்.பி பாலாஜி சரவணன் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். தென்பாகம் ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அப்போது பாளை மெயின்ரோட்டில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்பு கையில் 5 மாதக் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்தது.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் டி.என்.எச்.பி காலனியைச் சேர்ந்த மாரியப்பன்(44), குழந்தையின் தாய் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரி(22), அவரது தாயார் அய்யம்மாள்(40), தூத்துக்குடியைச் சேர்ந்த சூரம்மா(75) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் மாரீஸ்வரியின் 5 மாத பெண் குழந்தையை சட்ட விரோதமாக பணத்திற்கு விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாகக் குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார் குழந்தையை தூத்துக்குடியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையின் தாய், பாட்டி உள்பட 4 பேரையும் கைது செய்து, அவர்கள் குழந்தையை யாருக்கு விற்பனை செய்ய முயன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in