
தேஜஸ் ரயிலில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரயில்வே போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தேஜஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண், தனது வருங்காலக் கணவருடன் பயணம் செய்துள்ளார். கான்பூரில் அந்த பெண்ணிடம் ரயில்வே போலீஸ்காரர் ஒருவர், பாலியலில் சீண்டலில் ஈடுபட்டார்.
அத்துடன் அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் ரயில்வே போலீஸ்காரர் தாக்க முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம்பெண் புகார் அளித்தார். இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுவிட்சர்லாந்து பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் ஜிதேந்திரசிங் என்ற ரயில்வே போலீஸ்காரர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேஜஸ் ரயிலில் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.