நாட்டு வெடிகுண்டு வீசி இருவரைக் கொல்ல முயற்சி: நெல்லையில் காவல் நிலையம் அருகே பரபரப்பு

நாட்டு வெடிகுண்டு வீசி இருவரைக் கொல்ல முயற்சி: நெல்லையில் காவல் நிலையம் அருகே பரபரப்பு

நெல்லையில் காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரும் இவரது உறவினர் கலைச்செல்வனும் நேற்றிரவு ஓட்டலுக்குச் சென்றனர். அப்போது காரில் வந்த மர்ம நான்கு பேர் கொண்ட கும்பல், அவர்களை விரட்டினர். அப்போது காரில் இருந்து அவர்கள் வீசிய நாட்டு வெடிகுண்டு தரையில் பட்டு பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. அத்துடன் காரில் இருந்து இறங்கி அந்தக்கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு கலைச்செல்வன் மற்றும் ஐயப்பனை கொல்வதற்காக விரட்டி உள்ளனர்.

ஆனால், அவர்கள் இருவரும் அருகில் உள்ள நெல்லை டவுண் காவல் நிலையத்திற்குள் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அப்பகுதி முழுவதும் ஆய்வு நடத்தினர். நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் வரவழைக்கப்பட்டு அதிகாரிகள் நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ஐயப்பன் மற்றும் கலைச்செல்வனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களில் இருந்த பயங்கர ஆயுதங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி இருவரை கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in