பெண் தூய்மைப் பணியாளரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி: வருமானவரித்துறை அதிகாரி கைது

பெண் தூய்மைப் பணியாளரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி: வருமானவரித்துறை அதிகாரி கைது

அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண் தூய்மைப்பணியாளரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வருமானவரித்துறை அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த ரொக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன் (36) என்பவர் மூத்த வரிவிதிப்பு அதிகாரியாக கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் மணலியைச் சேர்ந்த கணவனை இழந்த 34 வயது பெண் ஒருவர் தூய்மைப் பணியாளராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி ரொக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன், தனது அறையைச் சுத்தம் செய்ய வருமாறு அந்தப் பெண்ணை அழைத்தார். அங்கு வந்து தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணைத் திடீரென ரொக்ஸ், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண், ரொக்ஸ் செயல்குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் பெண்ணின் புகாரைக் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் இந்த பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாமென பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரொக்ஸ் தொடர்ந்து அப்பெண்ணிற்கு ஃபோன் செய்து தகாத முறையில் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அந்தப் பெண், கடந்த 15-ம் தேதி வீட்டில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதன் பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பி பெண், நடந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வருமான வரித்துறை அதிகாரி ரொக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் தூய்மைப் பணியாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in