
தூத்துக்குடியில் பேத்தியைப் பார்க்கச் சென்ற பாட்டியை பைக்கில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் கீழே தள்ளி செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட முத்தையாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி முத்தம்மாள்(67). இந்தத் தம்பதியினருக்கு இரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ஈஸ்வரிக்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள தன் மகள் ஈஸ்வரி வீட்டிற்கு மினி பேருந்தில் தன் பேத்தியைப் பார்க்க முத்தம்மாள் சென்றார். இதன் பின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனியாக நடந்து சென்றார்.
அவர் தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்ட இருவாலிபர்கள் பைக்கில் அவரைப் பின் தொடர்ந்தே வந்துள்ளனர். அவர்களைப் பார்த்து பயந்து போன முத்தம்மாள் கொஞ்சம் விரைவாக நடக்கத் தொடங்கினார். இதைப் பார்த்ததும் இரு இளைஞர்களும் சேர்ந்து முத்தம்மாளை வேகமாகக் கீழே தள்ளிவிட்டனர். இதில் கீழே விழுந்த முத்தம்மாள் வலியால் துடித்தார். அந்த நேரத்தில் இரு வாலிபர்களும் முத்தம்மாள் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினைப் பறித்துவிட்டுத் தயாராக வைத்திருந்த தங்கள் டூவீலரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.