`கோவை இந்து அமைப்பின் கோட்டை'- தந்தை பெரியார் உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணியினர்!

`கோவை இந்து அமைப்பின் கோட்டை'- தந்தை பெரியார் உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணியினர்!

கோவையில் தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை இந்து முன்னணி அமைப்பினர் அடித்து நொறுக்கி சூறையாடினர். இது குறித்த புகாரில் இந்து முன்னணியை சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் அருண் என்பவர் தந்தை பெரியார் என்ற பெயரில் புதிதாக உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த உணவகம் இன்று திறக்கப்பட இருந்த நிலையில், நேற்றிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், தாங்கள் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் எனக் கூறி கடையை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். இதனை தடுத்த அருண், அவரது தாயார் ஆகியோரை கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர் அந்த கும்பல், கோயம்புத்தூர் இந்து அமைப்பின் கோட்டை. இங்கு பெரியார் பெயரில் உணவகம் வைக்கக்கூடாது என்று எச்சரித்து சென்றுள்ளனர்.

இது குறித்த புகாரின் பெயரில் உணவகம் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியின் காரமடை பகுதி கிளைச் செயலாளர் ரவி பாரதி மற்றும் சரவணகுமார், விஜயகுமார், பிரபு உள்பட 6 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது அத்துமீறல், ஆபாசமாக பேசுதல், கலகம் செய்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், "மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் இந்து முன்னணியினர் இப்படி வன்முறையை நடத்தியுள்ளனர். இவர்களுக்காக ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற காரணத்தினால் தமிழகத்தில் இதுபோன்ற அராஜகங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்" என்றார்.

தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in