தீட்சிதர்களுக்குள் மோதல்; வாயிலிருந்து கொட்டிய ரத்தம்: சிதம்பரம் கோயிலுக்குள் நடந்த களேபரம்

மருத்துவமனையில் நடராஜ தீட்சிதர்
மருத்துவமனையில் நடராஜ தீட்சிதர்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் ஒருவரை சக தீட்சிதர்கள் கடுமையாக தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடிபட்ட தீட்சிதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர்கோயில் பொது தீட்சிதர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடராஜர் கோயிலில் நடைபெற்றது. இதில் நடராஜ தீட்சிதர் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். அவருக்கும் சில தீட்சிதர்களுக்கும் எப்போதுமே ஒத்துவராது. இந்நிலையில் கூட்டத்தில் இருந்த தீட்சிதர்கள் சிவா, கௌரி, எஸ்.என்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தீட்சிதர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்கக் கோரி நடராஜ தீட்சிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு நடராஜ் தீட்சிதர், எஸ்சி- எஸ்டி வன்கொடுமை வழக்கை தான் கொடுக்கவில்லை என்றும், அது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தன்னால் வாபஸ் பெற இயலாது எனவும் பதில் அளித்துள்ளார். அதன் பின்னரும் அந்தப் பெண்ணிடம் கூறி அவர்தான் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும், அதுவரைக்கும் கோயிலில் அவருக்கு எந்த ஒரு பங்கும் கிடையாது என அவரிடம் வலியுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு, நடராஜ தீட்சிதரை நால்வரும் சேர்ந்து அடித்து உதைத்தனராம்.

இதில் காது, விலா எலும்பு, முழங்கால் ஆகிய இடங்களில் நடராஜ தீட்சிதருக்கு அதிக அடிபட்டதாகவும், அதனால் வலி அதிகமாகியும், வாயில் உமிழ் நீருடன் கலந்து ரத்தம் வருவதாகவும் கூறி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் சிதம்பரம் நடராஜர் கோயில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் தரப்பில் இதை ஒட்டு மொத்தமாக மறுத்துள்ளனர். நடராஜ தீட்சிதர் கூறுவது அனைத்தும் பொய் என்று அவர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in