'எங்களுக்கே பில் கொடுக்கிறீயா?'; சர்வரை நையப்புடைத்த கும்பல்: சிசிடிவியால் சிக்கிய ஒருவர்

'எங்களுக்கே பில் கொடுக்கிறீயா?'; சர்வரை நையப்புடைத்த கும்பல்: சிசிடிவியால் சிக்கிய ஒருவர்

ஓட்டலில் சாப்பிட்ட உணவுக்கு பில் கொடுத்த சர்வரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கி தப்பித்துச் சென்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆறுபேர் சாப்பிடச் சென்றனர். சர்வரிடம் அடுக்கடுக்காய் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். சர்வரும் சளைக்காமல் அவர்கள் கேட்டதையெல்லாம் கொண்டு வைத்துள்ளார். எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்து நைசாக நழுவ முயன்ற கும்பலிடம் அந்த சர்வர் பில்லை நீட்டி இருக்கிறார்.

இதனால் கடுப்பான அந்த கும்பல், ‘எங்களுக்கு பில் கொடுக்கிறீயா?’ எனச் சொல்லி அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அந்த ஓட்டலில் பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸார், கீவலூர் பகுதியைச் சேர்ந்த ராம் என்பவரைக் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து தகராறு செய்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in