அவசர உதவி கோரி அழைத்த விமானிகள்: அருணாசல பிரதேச ஹெலிகாப்டர் விபத்து குறித்த முக்கியத் தகவல்கள்!

அவசர உதவி கோரி அழைத்த விமானிகள்: அருணாசல பிரதேச ஹெலிகாப்டர் விபத்து குறித்த முக்கியத் தகவல்கள்!

அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில், அதில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். அத்துடன், விபத்துக்கு முன்னதாக ஹெலிகாப்டர் விமானிகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு (ஏடிசி) தகவல் அனுப்பியதும் தெரியவந்திருக்கிறது.

அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள மிக்கிங் கிராமம் அருகே நேற்று காலை 10.43 மணி அளவில், இந்திய ராணுவத்தின் ருத்ரா ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரில் ஐந்து பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. சீனா எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டுடிங் நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிக்கிங் கிராமம் அருகே இந்த விபத்து நேர்ந்தது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ஆகும். இது ருத்ரா மார்க் 4 என அழைக்கப்படுகிறது. போர்த் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர், மத்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் (ஹெச்.ஏ.எல்) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது. கிழக்கு லடாக் பகுதியில் சீன எல்லையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவந்த ஹெலிகாப்டர் இது.

வழக்கமான கண்காணிப்புப் பணிகளுக்காக, நேற்று காலை லிகாபாலி நகரிலிருந்து கிளம்பிய இந்த ஹெலிகாப்டர், மிக்கிங் கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். நால்வரின் உடல்கள் நேற்றே மீட்கப்பட்டுவிட்ட நிலையில், ஐந்தாவது நபரின் உடல் கிடக்கும் இடம் கண்டறியப்பட்டிருக்கிறது.

அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது. அந்தக் கிராமத்துக்குச் சாலை வசதிகள் இல்லை; ஒரே ஒரு தொங்கு பாலம்தான் உள்ளது. இதனால், ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த மூன்று மீட்புக் குழுக்கள் ஒரு எம்.ஐ-17 ஹெலிகாப்டர், இரண்டு துருவ் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டன. மலை மீது ஏறிச் சென்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் உதவி செய்தனர்.

விபத்துக்கு என்ன காரணம்?

விபத்து நடந்த பகுதியில் வானிலை தெளிவாக இருந்ததாகவும், விமானிகள் இருவரும் போதிய பணி அனுபவம் கொண்டவர்கள் என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. செங்குத்தான சரிவுகளும், அடர்ந்த வனப் பகுதியும் கொண்ட சவால்கள் மிகுந்த பகுதி அது என்று கூறியிருக்கும் ராணுவம், தொழில்நுட்பக் கோளாறு அல்லது மெக்கானிக்கல் பிரச்சினை இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

விபத்து நடப்பதற்கு முன்னதாக, அவசர உதவி கோரி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பியதாகவும் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ராணுவம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த விபத்து குறித்து விசாரிக்க நீதி விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in