சங்க நிதி முறைகேடு: இந்திய செஞ்சிலுவை நிர்வாகிகள் 3 பேரின் 3.37 கோடி சொத்துக்கள் முடக்கம்

சங்க நிதி முறைகேடு: இந்திய செஞ்சிலுவை நிர்வாகிகள் 3 பேரின் 3.37 கோடி சொத்துக்கள்  முடக்கம்

இந்திய செஞ்சிலுவை சங்க நிதி முறைகேடு வழக்கில் நிர்வாகிகள் மூன்று பேரின் 3.37 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

முதலாவது உலகப் போரின் போது இந்தியாவில் பிரத்யேக முதலுதவி மற்றும் மீட்பு அமைப்பு இல்லாததால் செஞ்சிலுவை சங்கத்தின் ஒரு அங்கமான செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் முதலுதவி சேவை அமைப்பின் வாயிலாகவே ராணுவ வீரா்களை மீட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னா், 1920-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் தனியாக செஞ்சிலுவை சங்கம் நிறுவப்பட்டது. பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதன் தமிழக பிரிவு செயல்படத் தொடங்கியது. குடியரசுத் தலைவரின் கீழ் செயல்படும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாநில தலைவராக அம்மாநில ஆளுநரே பதவி வகிப்பார்.

இந்த நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் மாநில தலைவரான ஆளுநர் பன்வாரிலால் சார்பில், ஆளுநர் மாளிகையின் துணைச் செயலாளர் செங்கோட்டையன், சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவில் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் 2011-ல் இருந்து இச்சங்கத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை, பல கோடி ரூபாய் பணத்தை கையாளுவதாகவும், அதன் நிர்வாகி ஒருவர், சங்க நிதியை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார்.

மேலும், சங்க நிர்வாகம், விளம்பரம், பிரச்சாரத்திற்கு 70 சதவீத நிதி பயன்படுத்திவிட்டு, வெறும் 30 சதவீத நிதி மட்டும் சமூக பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். ரத்ததான முகாம் மூலம் பெறப்படும் ரத்தத்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு பதில், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2019 வரையிலான ஆண்டு காலத்தில் நடந்த வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது பல முறைகேடுகள் நடந்தது தெரிய வந்துள்ளது'' என கூறப்பட்டிருந்தது.

மேலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 2020-ம் ஆண்டு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக சேர்மன் ஹரிஷ் மேத்தா, சங்கத்தின் பொதுச் செயலாளர் நஷ்ருதீன், பொருளாளர் இந்திரநாத், முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன் மற்றும் மணிஷ் சவுத்ரி, வடிவேல் முகுந்தன் என 6 பேர் மீதும் மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக தெரியவந்ததன் அடிப்படையில் அமலாக்கதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிதியை தவறாக பயன்படுத்தியது உறுதியானது. முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகள் ஹரிஷ் மேத்தா, செந்தில்நாதன், நஸ்ருதீன் ஆகியோரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இதன் மூலம் சேர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் சேர்க்கப்பட்ட இந்த மூவரின் 3.37 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in