
மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு மருத்துவமனை மயக்கவியல்துறை மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனை மயக்கவியல்துறை மூத்த உதவி பேராசிரியராக இருப்பவர் சையது தாகிர் உசேன். இவர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததால் மருத்துவக்கல்வி இயக்குநர் சையது தாகிர் உசேனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனை மறுத்துள்ள மயக்கவியல்துறை மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன், ‘’அரசு டாக்டர்கள் சட்டப் போராட்டக்குழு மாநில பொதுச்செயலாளராக உள்ளேன். டாக்டர்களின் பிரச்சினைக்காக போராடி வருகிறேன். பதவி உயர்வு, இடமாறுதலில் நடக்கும் குளறுபடி மற்றும் முறைகேடுகளை தட்டிக்கேட்டேன். கலாந்தாய்வில் பங்கேற்காத 6 பேர் மதுரை அரசு மருத்துவமனை மயக்கவியல்துறையில் உதவி பேராசிரியர்களாக கடந்த ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் விபத்தில் காயமடைந்த ஒரு மருத்துவ மாணவி தீவிர சுவாச சிகிச்சைபிரிவிற்கு வந்த போது நலம் விசாரித்தேன். பாலுணர்வை தூண்டும் வகையில் பேசியதாக எனக்கு எதிராக வற்புறுத்தி அந்த மாணவியிடம் இருந்து புகார் வாங்கப்பட்டது. புகாருக்கு ஆதாரம் இல்லாத நிலையில் என்னை அவசரகதியில் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். நீதிமன்றத்தின் மூலம் அப்பழுக்கற்றவன் என நிரூபிப்பேன்’’ கூறியிருந்தார்.
இதனிடையே, மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மயக்கவியல் மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன், மீதான பாலியல் புகார் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. இதில் 41 மாணவிகள் பங்கேற்று பதிலளித்தனர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்'' என கூறியுள்ளார்.