
விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்கிய உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம், மண்டைக்காடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முரளிதரன். இவர் நடுவூர்கரை பகுதியில் விசாரணை ஒன்றிற்காகச் சென்றார். அப்போது பெண் ஒருவர் எஸ்.ஐ முரளிதரனிடம் அத்துமீறி பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சார் ஆய்வாளர் அந்தப் பெண்ணைத் தாக்க முயன்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் மண்டைக்காடு காவல் நிலைய எஸ்.ஐ முரளிதரனை நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்திற்கு மாற்றி இன்று உத்தரவிட்டார். வைரல் வீடியோவைத் தொடர்ந்தே எஸ்.பி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.