ஆஃப்ஸ்பா சட்டம் வேண்டுமா, வேண்டாமா?

அசாம் - நாகாலாந்து கருத்து வேறுபாடு
ஆஃப்ஸ்பா சட்டம் வேண்டுமா, வேண்டாமா?

நாகாலாந்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில், 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) ரத்துசெய்ய வேண்டும் எனும் குரல்கள் வடகிழக்கு மாநிலங்களில் ஒலித்துவருகின்றன. குறிப்பாக, நாகாலாந்து சட்டப்பேரவையில் நேற்று (டிச.20) நடந்த சிறப்பு அமர்வின்போது இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா இந்தச் சட்டம் தொடரும் எனக் கூறியிருக்கிறார்.

நாகாலாந்து முதல்வர் நெபியூ ரியோ
நாகாலாந்து முதல்வர் நெபியூ ரியோ

நாகாலாந்து சட்டப்பேரவையில், முதல்வர் நெபியூ ரியோ நேற்று கொண்டுவந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மோன் மாவட்டத்தில் ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்குப் பேரவையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. “ஜனநாயகத்துக்கு விரோதமான, கொடூரமான ஆஃப்ஸ்பா சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஒட்டுமொத்த நாகா சமூகமும் கோருகிறது. மக்களின் விருப்பத்தைப் பேரவை எதிரொலிக்க வேண்டும்” என நெபியூ ரியோ பேசினார்.

“இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரமும், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படுவதால்தான், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு மாநிலம் பதற்றத்துக்குரிய பகுதி என மீண்டும் அறிவிப்பதற்கு முன்பு மாநில அரசிடம் கருத்து கேட்க வேண்டும்” என்று நாகாலாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பேட்டன் கூறினார்.

நாகாலாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பேட்டன்
நாகாலாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பேட்டன்

“நாகாலாந்தில் பல ஆண்டுகளாகச் சட்டம் ஒழுங்கு சீராக இருந்துவரும் நிலையில், இம்மாநிலத்தைப் பதற்றத்துக்குரிய பகுதியாக அறிவிப்பதற்கு நாகாலாந்து அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. நாகா அரசியல் குழுக்கள் மத்திய அரசுடன் சண்டை நிறுத்தம் செய்திருக்கின்றன. அமைதிப் பேச்சுவார்த்தையும் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதால், நாகா அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்றும் பேட்டன் குறிப்பிட்டார்.

ஆனால், அசாமில் இந்தச் சட்டம் நீடிக்கும் எனக் கூறியிருக்கும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசு கோர முடியாது. அது மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும். ஒருவேளை நான் இந்தச் சட்டத்தை ரத்துசெய்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். கிளர்ச்சிக் குழுக்கள் அதை அப்படியே பின்பற்றுமா? அப்படியான சூழலில், ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதன்மூலம் குழப்பநிலைதான் உருவாகும். மாநிலத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பொறுத்துதான் ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் அருணாசலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆஃப்ஸ்பா சட்டம் நீக்கப்பட்டது. அசாமில் அமைதிச் சூழல் தொடரும்பட்சத்தில், ஒட்டுமொத்த அசாமிலும் ஆஃப்ஸ்பா சட்டம் தொடர வேண்டுமா அல்லது சில இடங்களில் மட்டும் அமல்படுத்தப்பட வேண்டுமா என்பதைப் பற்றி பரிசீலிக்கலாம். சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும்பட்சத்தில் எந்த மாநில அரசும் ஆஃப்ஸ்பா சட்டம் தொடர வேண்டும் என விரும்பாது” என்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா குறிப்பிட்டார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது. நாகாலாந்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு நடக்கிறது. பேட்டன் பாஜகவைச் சேர்ந்தவர். சமீபத்தில் வாராணசியில் பாஜக முதல்வர்கள், துணை முதல்வர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் கலந்துகொண்ட இவர், ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்வது குறித்து பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதாகவும் பேட்டி அளித்திருந்தார். ஆனால், மோடியைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினாரா எனும் தகவல்கள் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in