மடாதிபதியாக ஆசைப்பட்டு கோயில் சிலை திருட்டு: 3 ஆண்டுகளுக்குப் பின் கூட்டாளியுடன் கைதான சாமியார்

மீட்கப்பட்ட கோயில் சிலை.
மீட்கப்பட்ட கோயில் சிலை.

மடாபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் 300 ஆண்டு பழமையான சிலையைக் கோயிலில் இருந்து திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து 300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை திருடு போனதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் 2019 அக்டோபர் மாதம் புகார் செய்யப்பட்டது. ஆனால், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் பதிவான கோயிலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி கும்பகோணம் பைபாஸ் சாலையில் சிசிடிவியில் பதிவான சந்தேக நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

நீலகண்டன்.
நீலகண்டன்.
மணிகண்டன்.
மணிகண்டன்.

அப்போது அவர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பதும், தேனுபுரீஸ்வரர் கோயிலில் இருந்து ஆஞ்சநேயர் சிலையைத் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பதும் உறுதியானது. அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நீலகண்டன் அளித்த தகவலின் அடிப்படையில், திருவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 1000 ஆண்டுகள் பழமையானதும், நாயக்கர் மன்னர்களால் நிறுவப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலையை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டனர். நீலகண்டன் வேலூரைச் சேர்ந்த தனது கூட்டாளி மணிகண்டனுடன் சேர்ந்து சிலையைத் திருடி வெளிநாட்டிற்கு அனுப்பி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

பிடிபட்ட நீலகண்டன் மடாதிபதியாக வேண்டும் என்ற ஆசையில் திருத்தணி அருகே சிறிதாக மடம் ஒன்று நிறுவி திருடிய ஆஞ்சநேயர் சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறிசொல்லி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது கூட்டாளியான மணிகண்டனை வேலூரில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in