
டீசலை திருடி கொடுக்குமாறு கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் கூறியதை தான் மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தன்னை பணியிட மாற்றம் செய்ததாக உயிரை மாய்த்துக்கொண்ட போலீஸ்காரரின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியிருக்கிறது.
சென்னை ராயபுரம் காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் லோகேஷ்(39). இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், அபிஷேக், ஹாஷிகா, என இரு பிள்ளைகள் உள்ளனர். முதல் நிலை காவலரான லோகேஷ் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்து அமைந்தகரை, மணலி உட்பட பல காவல் நிலையங்களிலும், இறுதியாக கோட்டை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லோகேஷிற்கு உடல் நலகுறைவு ஏற்பட்டதால் பல மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளாக் மார்க் செய்யப்பட்டு பெரவள்ளூர் காவல் நிலையம் குற்றப்பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் லோகேஷ்.
உடல் நலக்குறைவு காரணமாக இருந்து வரும் நிலையில், பிளாக் மார்க் செய்யப்பட்டதால் லோகேஷ் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் லோகேஷிற்கு ரத்த கொதிப்பு பிரச்சினை இருப்பதால் உடனடியாக பணியிட மாறுதலை ரத்து செய்து வடக்கு மண்டலத்தில் பணியிடம் ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என டிஜிபிக்கு லோகேஷின் மனைவி ஷாலினி மனு அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற லோகேஷ் நீண்ட நேரமாக வெளியே வராததால், அவரது மகள் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைத்தார். இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் காவலர் லோகேஷ் இறப்பதற்கு முன்னதாக துணை ஆணையருக்கு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் உதவி ஆணையர் சம்பத் பாலன் ஆகியோர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகவும், சமீபத்தில் 100 லிட்டர் டீசலை திருடி கொடுக்குமாறு ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் கூறியதை தான் மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தன்னை பணியிட மாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் ஒரு மாதத்திற்கு உதவி ஆணையர் ஐந்து லட்சம் ரூபாயும், காவல் ஆய்வாளர் ஒன்றை லட்சம் ரூபாயும் லஞ்சம் பெறுவதாகவும், இசெலான் மிஷினில் பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். உடனே பணியிட மாறுதலாகி செல்லுமாறு தினமும் வீட்டிற்கு காவலர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதால், தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க ஆடியோவில் பேசியுள்ளார். தற்போது இந்த ஆடியோ தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.