20டி போட்டியில் முதல் சதம்; 1019 நாட்களுக்கு பிறகு ஆச்சரியப்படுத்திய கோலி: வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

20டி போட்டியில் முதல் சதம்; 1019 நாட்களுக்கு பிறகு ஆச்சரியப்படுத்திய கோலி: வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1019 நாட்களுக்கு பிறகு கோலி சதம் அடித்துள்ளார். 20டி போட்டியில் கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் மோதியது. இதில், பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இதனால், சம்பிரதாய மோதலாக நேற்றிரவு இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனால், இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ராகுல்- கோலி விளையாடினர். தங்கள் பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கே.எல்.ராகுலும், கோலியும் இருந்தனர். இதனால், தொடக்கத்திலேயே மெதுவாக விளையாடினர். இதன் பின்னர் இருவரும் அதிரடி காட்டினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபருக்கி ஓவரில் பவுண்டரிகளை விளாசி இருவரும் இந்திய அணியின் எண்ணிக்கைய ஜெட் வேகத்தில் உயர்த்தினர். இரண்டு பேரும் அரைசதம் கடந்த நிலையில், 13-வது ஓவரில் இந்த கூட்டணி பிரிந்தது. 62 ரன்கள் குவித்த ராகுல் முதல் விக்கெட்டாக வெளியேறிய, அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸரை மட்டும் விளாசி அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். என்றாலும், ரிஷப் பந்த் உடன் இணைந்து விராட் கோலி தனது அதிரடியை தொடர்ந்தார். 1019 நாள்களுக்குப் பிறகு சர்வதேச களத்தில் தனது சதத்தை பதிவு செய்த கோலி, கிரிக்கெட் வரலாற்றில் தனது 71-வது சதத்தை நிறைவு செய்தார். அதேநேரத்தில், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு முதல் சதமாகும். சதம் எடுத்த பின்பும் அதிரடியாக ஆடிய கோலி, கடைசி வரை அவுட் இழக்காமல் 61 பந்துகளை சந்தித்து 122 ரன்களை குவித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜசைல்- ரஹ்மானுல்லா குர்பாஸ் விளையாடினர். முதல் ஓவரின் 4-வது பந்திலேயே ஜசைல்லை புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்த பந்தில் குர்பாஸையும் அவுட் ஆக, முதல் ஓவர் முடிவிலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது ஆப்கானிஸ்தான். ஆனாலும், புவனேஷ்வர் குமார் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவராக நடையை கட்டினர்.

இப்ராஹிம் ஜர்தான் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். இப்ராஹிம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 64 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம், 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in