மோசமாக விளையாடிய ரிஷப் பண்ட்; கொந்தளித்த கேப்டன் ரோகித்: வீரர்களின் அறையில் நடந்தது என்ன?

மோசமாக விளையாடிய ரிஷப் பண்ட்; கொந்தளித்த கேப்டன் ரோகித்: வீரர்களின் அறையில் நடந்தது என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், மோசமாக விளையாடிய ரிஷப் பண்ட்டை இந்திய கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக சாடியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதியது. லீக் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் – கே.எல்.ராகுல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடி இந்த கூட்டணி, 51 ரன்னில் பிரிந்தது. 2 சிக்ஸர் 3 பவுண்டரியை விளாசிய ரோகித் 28 ரன்னிலும், 2 சிக்ஸர் 1 பவுண்டரி அடித்த ராகுல் 28 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ரிஷப் பண்ட் 12 பந்தில் 14 ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 14 ரன்னிலும், அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து, முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சால், 19.5 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.

இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் மோசமான முறையில் ஆட்டம் இழந்ததால் கேப்டன் ரோகித் சர்மா கடும் கோபமடைந்தார். லெக் சைடு வந்த பந்தை ஆட முயற்சித்த போது ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முக்கியமான கட்டத்தில் ஃபண்ட் ஆட்டம் இழந்ததால் கொந்தளித்த கேப்டன் ரோகித் சர்மா வீரர்கள் தங்கும் அறையில் அவரிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in