ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனர் அஷ்வின் டானி காலமானார்!

அஷ்வின் டானி
அஷ்வின் டானி

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவியவரும், நிறுவனத்தின் இயக்குனருமான அஷ்வின் டானி, தனது 79 வயதில் இன்று(செப்.28) காலமானார்.

1968-ல் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் சாதாரண நிர்வாகியாக தனது பயணத்தை தொடங்கிய அஷ்வின் டானி, படிப்படியாக உயர்ந்து ரூ.21,700 கோடி வருவாயுடன் நாட்டின் மிகப்பெரிய பெயிண்ட் தயாரிப்பாளராக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்தார்.

அஷ்வின் டானி செப்டம்பர் 26, 1944 அன்று மும்பையில் பிறந்தார். 1966-ல் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, அக்ரான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற அமெரிக்கா சென்றார். டெட்ராய்டில் வேதியியலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 1968-ல் தனது குடும்ப வணிகமான ஏசியன் பெயிண்ட்ஸில் 1968-ல் மூத்த நிர்வாகியாக சேர்ந்தார்.

ஏசியன் பெயிண்ட்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ்

கம்ப்யூட்டர் மூலம் வண்ணப் பொருத்தம் என்ற கருத்தை முன்னோடியாக இந்தியாவில் செயல்படுத்தியவர் அஷ்வின் டானி. வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அவசியம் என்ற அஷ்வின் டானியின் பாணி, நிறுவனத்தின் உத்வேக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சந்தையில் முன்னணி இடம் பிடித்திருப்பதற்கு காரணமான அஷ்வின் டானி, வயது மூப்பு தொடர்பிலான உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in