‘என்னை மன்னித்துவிடுங்கள், நான் போட்டியிடவில்லை!’

காங்கிரஸ் தலைவர் தேர்தலிலிருந்து கழன்றுகொண்ட கெலாட்
டெல்லியில் சோனியா காந்தியைச் சந்திக்க இன்று அவரது இல்லம் சென்ற அசோக் கெலாட்...
டெல்லியில் சோனியா காந்தியைச் சந்திக்க இன்று அவரது இல்லம் சென்ற அசோக் கெலாட்...

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவைப் பெற்றிருந்த அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தரும் விஷயத்தில் பிடிவாதம் காட்டியதால் கடும் அதிருப்தியைச் சம்பாதித்துவிட்டார். இதையடுத்து இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் அவர், ராஜஸ்தான் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

அக்டோபர் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 30) கடைசி நாள். தேர்தல் முடிந்த இரண்டாவது நாள் (அக்டோபர் 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இந்தத் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு சோனியா காந்தி குடும்பம் ஆதரவு தெரிவித்தது.

எனினும், கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என நினைத்த அசோக் கெலாட், அதற்காகக் காய்நகர்த்தினார். நீண்டகாலமாக முதல்வர் பதவிக்காகக் காத்திருக்கும் சச்சின் பைலட்டுக்கு அந்தப் பதவி சென்றுவிடக் கூடாது என்று அசோக் கெலாட்டும் அவரது ஆதரவாளர்களும் பகீரதப் பிரயத்தனம் செய்தனர். இவ்விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்காக ராஜஸ்தானுக்குச் சென்ற மேலிடப் பார்வையாளர்களான அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரையும் அவமதிக்கும் வகையில் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் நடந்துகொண்டனர்.

அசோக் கெலாட்டின் இல்லத்தில் கூடி இதுகுறித்துப் பேச காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 20 சொச்சம் எம்எல்ஏ-க்கள்தான் அங்கு வந்தனர். 90 எம்எல்ஏ-க்கள், அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான அமைச்சரான சாந்தி தரிவாலின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து சபாநாயகர் இல்லத்துக்கு ஒரு சிறப்புப் பேருந்தில் சென்ற அவர்கள், அசோக் கெலாட்டுக்குப் பதிலாக சச்சின் பைலட்டை முதல்வராகத் தேர்ந்தெடுத்தால் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த மேலிடப் பார்வையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜஸ்தான் அமைச்சர்களான சாந்தி தரிவால், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் கட்சித் தலைமை, 10 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.

தனது செயல்பாடுகளால் சோனியா காந்தி குடும்பத்தின் நம்பிக்கையைக் குலைத்துவிட்ட அசோக் கெலாட், இனி தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. மறுபுறம், அவர் போட்டியிடுவார் என சில மூத்த தலைவர்கள் கூறிவந்தனர். இப்படியான சூழலில், அசோக் கெலாட் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று டெல்லி சென்ற அவரால் சோனியாவைச் சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று சோனியாவைச் சந்தித்த அசோக் கெலாட், தனது செயலுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று அவர் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும், இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் அறிவித்துவிட்டார். தனது செயலுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் முடிவடையவிருக்கும் நிலையில், மூத்த தலைவர் திக்விஜய் சிங் தேர்தல் படிவங்களை இன்று வாங்கினார். நாளை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கிறார். ஜி-23 குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான சசி தரூரும் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in