அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?

அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட மூத்த தலைவர் அசோக் கெலாட், தற்போது பிடிவாதமான கலகக்காரராகப் பார்க்கப்படுகிறார். கட்சியின் மூத்த தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்டதும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது காங்கிரஸில்?

தொடர்ந்து கிடைத்த தேர்தல் தோல்விகள், கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்; முழு நேரத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஜி-23 தலைவர்கள் கொடுத்த நெருக்கடி எனப் பல்வேறு அழுத்தங்களைத் தொடர்ந்து கட்சித் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது. 2017-ல் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தப் பதவியை உதறினார். அதன் பின்னர் சோனியா காந்திதான் இடைக்காலத் தலைவராக நீடிக்கிறார். பல மூத்த தலைவர்கள் பல்வேறு விதமாகக் கெஞ்சிப் பார்த்தும் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க ராகுல் உறுதியாக மறுத்துவிட்டார்.

இந்தச் சூழலில்தான், ஆகஸ்ட் 28-ல் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடத்தப்படும் எனத் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள். அக்டோபர் 19-ம் தேதி, வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன.

சோனியா காந்தி குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்ற அசோக் கெலாட் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் பரவின. சோனியா குடும்பம் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதால், அவருக்கே ஆதரவளித்தது. காங்கிரஸ் தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஒருபக்கம் கறார் காட்டினாலும், தானும் போட்டியிட விருப்பம் காட்டுகிறார் ஜி-23 தலைவர்களில் ஒருவரான சசி தரூர். அந்தக் குழுவைச் சேர்ந்த மணீஷ் திவாரியும் ரேஸில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சோனியா குடும்பத்தின் வெளிப்படையான ஆதரவு இருப்பதால், அசோக் கெலாட்டுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் எனக் கருதப்படும் சூழலில், அவர் இந்த நேரத்திலும் தனது பழைய பகையை மறக்காமல் ராஜஸ்தானில் அரசியல் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார். முதல்வர் பதவிக்காகக் காத்திருக்கும் சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வானதும் தனக்கு அந்தப் பதவி வழங்கப்படும் எனக் காத்திருந்தார். குறைந்தபட்சம் 2023-ல் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் முகமாகத் தன்னை முன்னிறுத்துவார்கள் என அவர் விரும்புகிறார்.

ஆனால், கட்சித் தலைவராகவே ஆகிவிட்டாலும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தரக் கூடாது; அதிலும் தனது பரம வைரியான சச்சின் பைலட்டுக்குப் பதவி போய்விடக் கூடாது என்பதில் ரொம்பவே பிடிவாதம் காட்டுகிறார் அசோக் கெலாட். நிலைமை மோசமாவதை உணர்ந்த ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இருந்தபடியே, ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என ஜெய்ப்பூர் மாநாட்டில் எடுத்த முடிவைச் சுட்டிக்காட்டி அசோக் கெலாட்டுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்னரும் அசோக் கெலாட் அசைந்துகொடுக்கவில்லை.

அதுமட்டுமல்ல! சச்சின் பைலட் முதல்வரானால் ராஜினாமா செய்வோம் என அசோக் கெலாட்டுக்கு ஆதரவான 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சச்சின் பைலட் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக அவர்கள் அறிவித்துவிட்டார்கள். அதிலும், இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்களிடம் பேசவே அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டதுதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்தான் ராஜஸ்தான் முதல்வர் யார் என முடிவுசெய்வதற்கான கூட்டத்தையே நடத்த வேண்டும் என்று அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட அவமானப்படுத்தப்பட்டு டெல்லி திரும்பியிருக்கிறார்கள் இருவரும். அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்தச் செயல் ஒழுங்கீனமானது என அஜய் மாக்கன் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கும் நிலையில் தனது ஆதரவாளர்களின் செயல்பாட்டுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நழுவுகிறார் அசோக் கெலாட்.

இவற்றுக்கு இடையே, ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பேசுபொருளாகியிருக்கிறது. ராகுலே தலைவராக வர வேண்டும் என அசோக் கெலாட் பல முறை பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்ததுண்டு. இதுதொடர்பாக, சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான், “அசோக் கெலாட் இரண்டு மூன்று மாதங்கள் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்துவிட்டு, ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தை முடித்துக்கொண்டுவந்ததும், அவரிடம் தலைவர் பதவியை ஒப்படைக்கலாம் என நினைத்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அசோக் கெலாட் மீது நம்பிக்கை வைத்திருந்த சோனியா குடும்பத்தினரும் தற்போது அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இவ்வளவு பிரச்சினைக்குரிய ஒருவரை எப்படி சோனியா குடும்பம் நம்பியது என்றும் பலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். நிலவரம் கைமீறிச் சென்றதை அடுத்து மற்றொரு மூத்த தலைவர் கமல் நாத் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அசோக் கெலாட் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். கட்சிக்கு ஆபத்பாந்தவனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அசோக் கெலாட் அதிர்ச்சி வைத்தியராக மாறியிருக்கும் நிலையில் அவருக்கான ஆதரவு தொடருமா என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.

இவற்றையும் வாசியுங்கள்:

அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் அசோக் கெலாட்டா?
அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?
மீண்டும் வெடிக்கும் பைலட் - கெலாட் யுத்தம்: காங்கிரஸுக்குப் புதிய தலைவலி!
அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?
‘ஒருவருக்கு ஒரு பதவிதான்’ - அசோக் கெலாட்டுக்கு ராகுல் காந்தி மறைமுகமாக உணர்த்தும் சேதி என்ன?
அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?
அசோக் கெலாட்டுடன் மீண்டும் மோதும் சச்சின் பைலட்: அப்படி என்ன பிரச்சினை ராஜஸ்தான் காங்கிரஸில்?
அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?
சாதித்துக்காட்டிய சச்சின் பைலட்
அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?
‘ராகுல் காந்தியைத் தலைவராக்குக!’ - ராஜஸ்தான் காங்கிரஸ் ஏகமனதாகத் தீர்மானம்
அதிரவைத்த அசோக் கெலாட்: காங்கிரஸின் அடுத்த தலைவரா, கலகக்காரரா?
‘ராகுல் போட்டியிட்டால் வரவேற்போம்; ஆனால்...’ - காங்கிரஸ் தலைவர் தேர்தல் விஷயத்தில் கறார் காட்டும் ஜி-23 தலைவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in