கலகத்துக்குப் பின்னர் சோனியாவைச் சந்திக்கும் அசோக் கெலாட்: அடுத்து நடக்கப்போவது என்ன?

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் பதவியே கிடைக்கவிருந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தர விரும்பாமல் குழப்பம் ஏற்படுத்திய அசோக் கெலாட், இன்று டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 17-ல் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சோனியா காந்தி குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்ற அசோக் கெலாட்டுக்கே அடுத்த தலைவர் பதவி என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், கட்சித் தலைவர் பதவியே கிடைக்கும் எனும் சூழலில்கூட, ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தர அவர் மறுத்தார். குறிப்பாக, முதல்வர் பதவியைக் குறிவைத்து தன்னுடன் மோதிவரும் சச்சின் பைலட்டுக்கு அந்தப் பதவி சென்றுவிடக் கூடாது என காய்நகர்த்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேச ராஜஸ்தான் சென்றிருந்த காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜுன கார்கேயைச் சந்தித்துப் பேச அவரது ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அசோக் கெலாட்டின் இல்லத்தில் கூடி இதுகுறித்துப் பேச காங்கிரஸ் கட்சியின் 107 எம்எல்ஏ-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 20 சொச்சம் எம்எல்ஏ-க்கள்தான் அங்கு வந்தனர். மற்றவர்கள், அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான அமைச்சரான சாந்தி தரிவாலின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து சபாநாயகர் இல்லத்துக்கு ஒரு சிறப்புப் பேருந்தில் சென்ற அவர்கள், அசோக் கெலாட்டுக்குப் பதிலாக சச்சின் பைலட்டை முதல்வராகத் தேர்ந்தெடுத்தால் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர். தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் தலைவர் யார் எனத் தீர்மானிக்கப்பட்ட பின்னரே ராஜஸ்தான் முதல்வர் யார் எனத் தீர்மானிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தனர்.

அஜய் மாக்கன்
அஜய் மாக்கன்

இதனால் கடும் அதிருப்தியடைந்த அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருவரும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். இதையடுத்து, ராஜஸ்தான் அமைச்சர்களான சாந்தி தரிவால், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் கட்சித் தலைமை, 10 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறது. இனி காங்கிரஸ் தலைவர் ரேஸில் அசோக் கெலாட் இடம்பெற முடியாது என்றே பரவலாகக் கருதப்படுகிறது. எனினும், அவருக்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாகச் சில மூத்த தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

நேற்று மாலை அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா போன்ற மூத்த தலைவர்கள் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினர். பின்னர் அசோக் கெலாட்டை அழைத்துப் பேசிய அவர்கள், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டனர்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்நிலையில் இன்று அசோக் கெலாட் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்னதாக, தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அசோக் கெலாட். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சிங் காச்சரியாவாஸ், விஷ்வேந்திர சிங் ஆகியோர் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்கள்.

மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணி இன்று மாலை 5 மணிக்கு சோனியா காந்தியைச் சந்திக்கவிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in