சிவசேனா வரிசையில் ஆம் ஆத்மியா?

சீறும் கேஜ்ரிவால்... பாயத் தயாராகும் பாஜக!
சிவசேனா வரிசையில் ஆம் ஆத்மியா?

மகாராஷ்டிரத்தின் மிகப் பெரிய அரசியல் அடையாளமாக இருந்த சிவசேனா கட்சியில் பிளவை ஏற்படுத்தி - சிவசேனாவின் அதிருப்தியாளர்களின் பெயரில் - ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது பாஜக. அக்கட்சியின் அடுத்த குறி ஆம் ஆத்மி கட்சிதான் என்று பரவலாக நம்பப்படுகிறது.

டெல்லியைத் தாண்டி பஞ்சாபிலும் ஆட்சியமைத்து தனது பலத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, இனி பாஜகவின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். “பிற கட்சிகள் உடைந்துபோகலாம், பணிந்துபோகலாம். நீங்கள் அப்படிச் செய்துவிடாதீர்கள்” எனத் தனது கட்சியினருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். பதிலுக்கு, ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வேறு சில அஸ்திரங்களை பாஜக இறக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஜூலை 5-ல் டெல்லி சட்டப்பேரவையில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆற்றிய உரையில் பாஜக மீதான உச்சபட்ச கோபமும் பதற்றமும் மறைமுகமாக வெளிப்பட்டன. “இன்று நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொன்றாக உடைக்கப்படுகின்றன. ஆம் ஆத்மி கட்சியினர் உடைந்துவிடக் கூடாது. சிறை செல்லவும் தயாராக வேண்டும். நான் கூட 15 நாட்கள் சிறையில் இருந்தேன். அது ஒன்றும் அத்தனை மோசமான விஷயம் அல்ல. சிறைசெல்வதால் ஒன்றும் ஆகிவிடாது” என்று அவர் நகைச்சுவையாகப் பேசினாலும் உண்மையில் அவர் அத்தனை உற்சாகமாக இல்லை.

அன்றைய தினம் அரை மணி நேரம் அடைமழை போல் தொடர்ந்த பேச்சில், அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை பாஜக மீது வைத்தார் கேஜ்ரிவால். உதய்ப்பூரில் தையல் கலைஞர் கன்னையா லாலைப் படுகொலை செய்த இருவரில் ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர், காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் பாஜக நிர்வாகி என வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டிய அவர், “வழக்கமாக பாஜகவில் திருடர்கள், நயவஞ்சகர்கள், பாலியல் குற்றவாளிகள் இருப்பார்கள். இப்போது அந்தப் பட்டியலில் பயங்கரவாதிகளும் சேர்ந்துவிட்டார்கள் போலும்” என்று கூறினார்.

“டெல்லி மக்களை பாஜகவினர் அச்சுறுத்துகின்றனர். ‘எங்களிடம் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, டெல்லி போலீஸ், பண பலம் எல்லாம் இருக்கின்றன. உங்களிடம் என்ன இருக்கிறது?’ என அவர்கள் கேட்கிறார்கள். டெல்லியின் இரண்டு கோடி மக்களும் சொல்கிறார்கள், ‘எங்கள் பக்கம் எங்கள் மகன் கேஜ்ரிவால் இருக்கிறார்’ என்று” - டெல்லி சட்டப்பேரவையில் பலத்த மேஜைத் தட்டல்களுக்கு மத்தியில் மென் குரலில் சவால் விட்டார் கேஜ்ரிவால்.

தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு மோடி முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சிங்கப்பூர், கோபன்ஹேகன் போன்ற நகரங்களுக்குச் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் அவர், டெல்லி மாடலை உலகமெங்கும் காட்டுவதைத் தடுக்கவே மோடி இவ்வாறு செய்வதாகவும் சாடினார்.

அதீத தன்னம்பிக்கையுடன் கூடிய பேச்சு கேஜ்ரிவாலின் இயல்பான குணம்தான். கூடவே, டெல்லியைத் தாண்டி பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது அவரது தன்னம்பிக்கையைப் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. குஜராத், இமாசல பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா காஷ்மீர் என பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியை வளர்த்தெடுக்க தொடர்ந்து முனைப்புக் காட்டுகிறார் அவர். குறிப்பாக, மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கட்சியை வளர்க்க பெரும் பிரயத்தனம் செய்கிறார்.

குஜராத்தில் 27 ஆண்டுகால பாஜக ஆட்சியால் மக்கள் சோர்வடைந்திருப்பதாகவும், மாற்றம் வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் கேஜ்ரிவால், அந்த மாற்றத்தை ஆம் ஆத்மி கட்சிதான் தர முடியும் எனக் கூறிவருகிறார். டெல்லியில் நிறைவேற்றிய இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக் போன்ற திட்டங்களை குஜராத்தில் கொண்டுவருவதாகவும் உறுதியளிக்கிறார். வரும் டிசம்பர் மாதம் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கேஜ்ரிவாலின் பேச்சுக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

“எங்களிடம் ‘அம்பேத்கர், பகத் சிங் படங்களை மட்டும் மாட்டி வைத்திருக்கிறீர்கள். சாவர்க்கர், ஹெட்கேவர் படங்களை ஏன் வைக்கவில்லை?’ என்று பாஜகவினர் கேட்கிறார்கள். அவற்றை நீங்கள் மாட்டி வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? ‘இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி படங்களை ஏன் வைக்கவில்லை?’ எனக் காங்கிரஸ் கட்சியினர் கேட்கின்றனர். எங்களுக்கு என்ன தேவை வந்தது?” என்று பேரவையில் இரு கட்சிகளையும் சாடிய கேஜ்ரிவால், “அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். அரசமைப்புச் சட்டத்தின் மூலம் ஜனநாயக வழியில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பாஜகவினருக்குத் தேர்தல் என்றாலே பிடிக்காது. அதனால்தான் அவர்கள் அம்பேத்கரை வெறுக்கின்றனர்” என்று அடுக்கடுக்காகக் குற்றம்சாட்டினார்.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் அதை நடத்தவிடாமல் பாஜக தடுப்பதாகவும் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார். “டெல்லி மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக பாஜகவினர் கொள்ளையடித்தனர். இதனால் வெறுப்படைந்திருந்த டெல்லி மக்கள் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கத் தயாராகினர். மார்ச் 9-ம் தேதி மாநகராட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பிரதமரிடமிருந்து தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. தொலைபேசி அழைப்பு சென்றது. இதையடுத்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது” என்று பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டினார்.

தேர்தல் மேலும் தாமதமானால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். கேஜ்ரிவால் மட்டுமல்ல, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் வைக்கும் புகார்களுக்கு மிகக் கடுமையாகப் பதிலடி கொடுத்துவருகிறார்.

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பண மோசடிப் புகாரில் கைதுசெய்யப்பட்டார். இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக் போன்ற திட்டங்களை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது கைதானது கேஜ்ரிவாலுக்குப் பெரும் அதிர்ச்சி தந்த நடவடிக்கை. டெல்லி சட்டமன்றத்தைக் கலைப்பது, மணீஷ் சிசோசியாவைக் கைதுசெய்வது என பாஜக அடுத்தடுத்து திட்டமிடுவதாகவும் புகார்களை அடுக்குகிறார் அர்விந்த் கேஜ்ரிவால். பதிலுக்கு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை மணீஷ் சிசோடியா முன்வைத்திருக்கிறார்.

சண்டிகர், அந்தமான் நிகோபர் போல டெல்லியை சட்டப்பேரவை இல்லாத ஒன்றியப் பிரதேசமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் ஆம் ஆத்மி தலைவர்கள் அச்சப்படுகிறார்கள். தனது உரையில் இதைப் பற்றியும் கேஜ்ரிவால் குறிப்பிட்டார். ஆம் ஆத்மி கட்சியை ஒன்றும் செய்ய முடியாததால்தான் இப்படி ஒரு முடிவுக்கு பாஜக வந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக அப்படி ஏதேனும் செய்தால் டெல்லி மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்றும் எச்சரித்தார். “கேஜ்ரிவால் வருவார் போவார். ஆனால், பாஜக இந்தப் போக்கைத் தொடர்ந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் நிலைக்காது” என்றும் குறிப்பிட்டார்.

பாஜகவின் இரண்டு முக்கியத் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து அச்சப்படுவதாகக் கூறிய கேஜ்ரிவால், “உலகின் மிகப் பெரிய கட்சி என்று சொல்லிக்கொள்கிறீர்கள். நாங்களோ உலகின் மிகச் சிறிய கட்சி. அப்புறமும் ஏன் எங்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவுக்குள் சீனா ஊடுருவிவிட்டதாக கேஜ்ரிவால் சொன்னது தேசத்துரோகம் என்றெல்லாம் பதிலுக்குக் கொந்தளிக்கும் பாஜக, இதுவரை அவரது முக்கியக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்கவில்லை. பாய்ச்சலுக்குத் தயாராவதால்தான் பாஜக அமைதி காக்கிறது என்கிறார்கள். அப்படி நேர்ந்தால் மகாராஷ்டிரத்தில் நடந்துமுடிந்த அரசியல் பரபரப்புகள் அடுத்து தலைநகரில் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in