‘நான் கிரிமினல் அல்ல... ஒரு மாநிலத்தின் முதல்வர்!’ - கேஜ்ரிவால் குமுறல்

‘நான் கிரிமினல் அல்ல... ஒரு மாநிலத்தின் முதல்வர்!’ -  கேஜ்ரிவால் குமுறல்

சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் ‘உலக நகரங்கள்’ மாநாட்டில் கலந்துகொள்ள தனக்கு அனுமதி வழங்குவதில் தாமதமாவது குறித்து அதிருப்தியடைந்திருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “நான் கிரிமினல் அல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர்” என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியைத் தாண்டி பஞ்சாபிலும் ஆட்சியமைத்து தனது பலத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, குஜராத், இமாசல பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா காஷ்மீர் என பிற மாநிலங்களிலும் தடம் பதிக்கும் முயற்சியில் இருக்கிறது. குறிப்பாக, மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கட்சியை வளர்க்க பெரும் பிரயத்தனம் செய்கிறார். குஜராத்தில் 27 ஆண்டுகால பாஜக ஆட்சியால் மக்கள் சோர்வடைந்திருப்பதாகவும், மாற்றம் வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் கேஜ்ரிவால் அந்த மாற்றத்தை ஆம் ஆத்மி கட்சிதான் தர முடியும் எனக் கூறிவருகிறார். டெல்லியில் நிறைவேற்றிய இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக் போன்ற திட்டங்களை குஜராத்தில் கொண்டுவருவதாகவும் உறுதியளிக்கிறார். வரும் டிசம்பர் மாதம் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது பேச்சுக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மறுபுறம், மகாராஷ்டிரத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசைக் கவிழ்த்தது போல, டெல்லி ஆம் ஆத்மி அரசையும் பாஜக குறிவைத்திருப்பதாக சமீபகாலமாகப் பேசப்படுகிறது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்குள்ளும் பிளவை ஏற்படுத்தும் வேலைகளில் பாஜக இறங்கியிருப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டிவருகிறார். “இன்று நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொன்றாக உடைக்கப்படுகின்றன. அனைத்து கட்சிகளும் பணிந்து நிற்கின்றன. மொத்த தேசமும் இப்போது ஆம் ஆத்மி கட்சியைத் திரும்பிப் பார்க்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி கட்சியினர் உடைந்துவிடக் கூடாது” என்று ஜூலை 5-ல் டெல்லி சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சண்டிகர், அந்தமான் நிகோபர் போல டெல்லியை சட்டப்பேரவை இல்லாத ஒன்றியப் பிரதேசமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி தலைவர்கள் அச்சப்படுகிறார்கள். சட்டப்பேரவை உரையில் இதைப் பற்றியும் கேஜ்ரிவால் குறிப்பிட்டார். ஆம் ஆத்மி கட்சியை ஒன்றும் செய்ய முடியாததால்தான் இப்படி ஒரு முடிவுக்கு பாஜக வந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக அப்படி ஏதேனும் செய்தால் டெல்லி மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்றும் எச்சரித்தார். “கேஜ்ரிவால் வருவார் போவார். ஆனால், பாஜக இந்தப் போக்கைத் தொடர்ந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் நிலைக்காது” என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிரதமர் மோடி முட்டுக்கட்டை போடுவதாகவும் அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். சிங்கப்பூர், கோபன்ஹேகன் போன்ற நகரங்களில் நடக்கும் மாநாடுகளில் கலந்துகொள்ள தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் அவர், டெல்லி மாடலை உலகமெங்கும் காட்டுவதைத் தடுக்கவே மோடி இவ்வாறு செய்வதாகவும் சாடிவருகிறார்.

தற்போது, சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருக்கும் ‘உலக நகரங்கள்’ மாநாட்டில் கலந்துகொள்ள தனக்கு அனுமதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக மீண்டும் குற்றம்சாட்டியிருக்கிறார் கேஜ்ரிவால்.

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை நடக்கவிருக்கும் இம்மாநாட்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி கேஜ்ரிவால் உரையாற்றுவார் என நிகழ்ச்சி நிரலில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு, கடந்த மாதம் சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 17) பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்த கேஜ்ரிவால், ‘உலக மாநாட்டில் டெல்லி மாடல் குறித்து உரையாற்றுமாறு சிங்கப்பூர் அரசு எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த மாநாட்டில், உலகின் பெரும் தலைவர்கள் முன்னிலையில் டெல்லி மாடல் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. உலகமே இன்று டெல்லி மாடல் குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறது. இந்த அழைப்பு நமது நாட்டுக்குப் பெருமையையும் மரியாதையையும் வழங்கக்கூடியது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

டெல்லியின் சுகாதாரம் மற்றும் கல்வி மாடலால் உலகம் ஈர்க்கப்பட்டிருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்த கேஜ்ரிவால், ‘டெல்லியின் பள்ளிகள், மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள், இலவச மின்சாரம் போன்றவை குறித்து இம்மாநாட்டில் நான் உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை சேர்க்கும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இம்மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “நான் என்ன குற்றம் செய்தேன் என எனக்குத் தெரியவில்லை. எந்த நீதிமன்றமும் என்னைத் தடை செய்யவில்லை. ஒரு சாமானியக் குடிமகனுக்குக்கூட வெளிநாடு செல்ல சுதந்திரம் இருக்கிறது. எனில், அர்விந்த் கேஜ்ரிவால் ஏன் வெளிநாடு செல்ல முடியாது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நானே அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை. ஆனால், இது நமது நாட்டுக்குப் புகழ் சேர்க்கும் பயணம் என்பதால் கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நான் ஒன்றும் கிரிமினல் அல்ல. ஒரு மாநிலத்தின், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்” என்று கேஜ்ரிவால் கூறினார். இந்தத் தாமதத்துக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக உறுதியாக நம்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in