ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: சினிமா தயாரிப்பாளர் அதிரடி கைது - ரூ.1.40 கோடி முடக்கம்!

ஆர்.கே.சுரேஷுடன் ரூசோ
ஆர்.கே.சுரேஷுடன் ரூசோ

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளரும், ‘ஓயிட் ரோஸ்’ பட அறிமுக நடிகருமான ரூசோ கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்த 1.40 கோடி ரூபாயை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை அமைந்தக்கரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே கடந்த மே மாதம் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம், பேச்சிமுத்துராஜ் (எ) ரஃபீக், ஐயப்பன் மற்றும் செந்தில் ராஜ் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒயிட் ரோஸ் பட பூஜை
ஒயிட் ரோஸ் பட பூஜை

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரூசோ என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்து, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1.40 கோடி பணத்தை முடக்கியுள்ளனர். ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரூசோ சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் எடுத்து வரும் ‘ஒயிட் ரோஸ்’ என்ற திரைப்படத்தில் புதுமுக நடிகராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in