
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நாளை ((ஜன.5) காலை 8 மணியளவில் சந்தனம் கலைதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தரிசன நிகழ்வுகளைக் காண மின்னணு திரை வசதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் வளாகத்தில் ஒற்றைக்கல் மரகத நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் பூசிய சந்தனத்துடன் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆருத்ரா தரிசனத்தை யொட்டி நடராஜர் சிலை மீது பூசிய சந்தனக்காப்பு களையப்படும். இதன்படி, இந்தாண்டு விழாவையொட்டி, நாளை (ஜன.5) காலை 8 மணிக்கு சந்தனம் களையப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், இரவு 11 மணியளவில் மூலவர் மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். நாளை மறுநாள் ( ஜன.6) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும். தரிசன நிகழ்வுகளை காண மின்னணு திரை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போலி சந்தனப் பாக்கெட் விற்பனையைத் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என 4 பிரிவுகளாக மரத்தடுப்பு அமைத்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய, மிக முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்து பக்தர்கள் எவ்வித இடையூறின்றி வெளியே 2 பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்வோருக்கு சந்தனம் வழங்கப்படும். விழாவிற்கு வருவோரை கண்காணிக்க 28 இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 20 கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 10 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வரிசையில் நீண்டநேரம் காத்திருக்கும் பக்தர்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நேரில் வழங்க கோயில் நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழித் தடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள புதிய கலையரங்கில் நாளை (ஜன.5) காலை 9 மணி முதல் ஜன.6-ம் தேதி காலை 9 மணி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி, ஜன.6-ல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.