நடராஜர் கோயிலில் வழக்கமான நேரத்தை விட காலதாமதமாக நடந்த ஆருத்ரா தரிசனம்!

நடராஜர் கோயிலில் வழக்கமான நேரத்தை விட காலதாமதமாக நடந்த ஆருத்ரா தரிசனம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மிக முக்கிய உற்சவமான ஆருத்ரா தரிசன விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வழக்கமான நேரத்தை விட வெகு காலதாமதமாக மாலை 5 மணிக்கு நடத்தப்பட்டாலும் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர் .

உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர்  கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ம் தேதியன்று  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம்  நேற்று நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கு  ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

அதனையொட்டி  முக்கிய உற்சவமான  ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது.  இன்று காலை  சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் தரிசனம் பார்க்க  காலையிலிருந்தே கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

ஆனால்  அறிவித்தபடி மூன்று மணிக்கு தரிசனம் நடைபெறவில்லை.  அதிலிருந்து இரண்டு மணி நேரம் கழித்து ஐந்து மணி அளவில் நடராஜர் தரிசனம்  நடத்தப்பட்டது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நடராஜர் நடனத்துடன் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார் சிவகாமி அம்மனும் புறப்பட்டு நடராஜருக்கு எதிரே வந்து நடனமாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். அதன் பிறகு 21 படிக்கட்டுகள் வழியாக நடராஜர் சித் சபையை சென்று அடைந்தார்.

தரிசனம் வெகு காலதாமதமாக நடத்தப்பட்டதால் பக்திபெருக்கோடு வந்திருந்த பக்தர்கள் பெரும் இன்னலுக்கு  ஆளானார்கள்.  கடந்த ஆண்டும் இதேபோல குறிப்பிட்ட நேரத்தில் நடத்தாமல் மக்களை துன்புறுத்திய சபாநாயகர் கோயில் தீட்சிதர்கள்,  இந்த ஆண்டும் வெகு கால தாமதமாக இதுவரை இல்லாத நிகழ்வாக மாலை ஐந்து மணிக்கு நடத்தியிருப்பது பக்தர்களை  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

நாளை சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் ஆருத்ரா தரிசனம்  உற்சவம் முடிவடைகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in