மிராமுக்கு மின் அதிர்ச்சி கொடுத்ததா சீன ராணுவம்?

மீட்கப்பட்ட மகன் தொடர்பாக தந்தை சொன்ன அதிர்ச்சித் தகவல்
மிராம் தரோன்
மிராம் தரோன்

சீன ராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட அருணாசல பிரதேச இளைஞர் மிராம் தரோன், திங்கள்கிழமை (ஜன.31) தனது பெற்றோரைச் சென்றடைந்திருக்கிறார். அப்பர் சியாங் மாவட்டத்தின் ட்யூட்டிங் பகுதியைச் சேர்ந்த மிராம், இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தனது சொந்த மண் திரும்பி உறவுகளுடன் இணைந்திருப்பது, அருணாசல பிரதேச மக்களுக்கு நிம்மதியளித்திருக்கிறது.

எனினும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (Line of Actual Control) அருகே மிராம் காணாமல்போனதாக வெளியான செய்திகளின் மர்மம் இன்னும் விலகவில்லை. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்தே அவரைக் கடத்திச் சென்றது எனத் தகவல்கள் வெளியான நிலையில், எல்லைதாண்டி வந்த அவரைக் கண்டுபிடித்து மீட்டதாகவே சீன ராணுவம் கூறியது.

ஜனவரி 27-ல் அஞ்சா மாவட்டத்தின் கிபித்து பகுதியில் உள்ள வாச்சா - தமாய் இணைப்புப் பகுதியில் சீன ராணுவம் அவரை இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்தது. மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட உரிய நடைமுறைகளுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என அரசு தெரிவித்திருந்தது. சில நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

நேற்று மாலை மிராமை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவத்தினரும், உள்ளூர் நிர்வாகத்தினரும் அதில் கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்து அவரது சொந்த கிராமமான ஜிதோவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மிராமைப் பத்திரமாக மீட்டெடுத்த மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் அவரது தந்தை ஒபாங் தரோன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதேவேளையில், தனது மகன் சீன ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையில், ஒரு வாரம் கட்டிவைக்கப்பட்டிருந்ததாகவும் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். மிராம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் மகன் இன்னமும் அதிர்ச்சியில் இருக்கிறார். அவரது முதுகில் உதைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவருக்கு லேசான மின்சார அதிர்ச்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. உணவு அருந்தும்போதும், கழிப்பறைக்குச் செல்லும்போதும் மட்டும்தான் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. எனினும், போதுமான உணவை அவருக்கு சீன ராணுவம் வழங்கியது” எனக் கூறியிருக்கிறார்.

சீன ராணுவத்தால் மிராம் கடத்தப்பட்டதாகவே பாஜக எம்.பி தாபிர் காவ் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தை நேரில் பார்த்த மிராமின் நண்பர் ஜானி யய்ங், சீன ராணுவம் அவரைப் பிடித்துச் சென்றதாகவும், தான் எப்படியோ தப்பி வந்துவிட்டதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in