3,500 ஆண்டு கால கல்வட்டம், முதுமக்கள் தாழிகள்: சிவகங்கையில் தொடர்ச்சியாக கிடைக்கும் தொல் எச்சங்கள்!

3,500 ஆண்டு கால கல்வட்டம், முதுமக்கள் தாழிகள்: சிவகங்கையில் தொடர்ச்சியாக கிடைக்கும் தொல் எச்சங்கள்!
கிடைக்கப்பெற்ற கல்வெட்டு

சிவகங்கையில் தொடர்ச்சியாக தொன்மையின் எச்சங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் தொல் நடைக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை சிதையாமல் பாதுகாக்க வேண்டும் என்று அக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை தொல் நடைக் குழுவைச் சேர்ந்த முருகன், சித்தலூர் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக அக்குழுவின் நிறுவனர் புலவர் கா. காளிராசாவிற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், காளிராசா அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்வெட்டு தொல் எச்சங்கள் இருப்பதையும் அவர் அடையாளம் கண்டார்.

இதுகுறித்து காளிராசா செய்தியாளர்களிடம் கூறும்போது, "சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கிலிருந்து செல்லும் பிரிவு சாலையின் இடப் பக்கம் இரண்டு அம்மன் கோயில்கள் உள்ளன. அதில் ஒன்றில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கோயிலை ஒட்டி கிடந்த கற்குவியலில், கல்லெழுத்து பொறிப்புடன் ஒரு கல்வெட்டு இருந்தது.

ஆய்வு மேற்கொள்ளும் புலவர் காளிராசா
ஆய்வு மேற்கொள்ளும் புலவர் காளிராசா

இதனை, வேறொரு பகுதியில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தி இருக்கலாம். மேலும், இக்கல்லை நிலைக்கல்லின் மேல் பகுதியாக பயன்படுத்தியிருக்கலாம். இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்கப்பெற்றிருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இக்கல்வெட்டின் எழுத்தமைதி 13-ம் நூற்றாண்டாக இருக்கலாம். இதில் நாயனாருக்கு, கடமை, அந்தராயம் போன்ற வரி தொடர்பான சொற்களும் குறிச்சி குளம், இசைந்த, ஊரோம் போன்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் குறிச்சி குளம் பகுதி இறைவர்க்கு தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

சித்தலூரை அடுத்த குறிச்சி கண்மாய் எனும் பெயரில் கண்மாய் ஒன்று உள்ளது. இக்கரையில் சிதைந்த நிலையில் துண்டு கல்வெட்டு ஒன்றும் உள்ளது. மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது. சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம். ஆனாலும் அதற்கு போதுமான தரவுகள் கிடைக்கவில்லை.

கிடைக்கப்பெற்ற கல்
கிடைக்கப்பெற்ற கல்

இக்கல்வெட்டு, அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோயிலில் இருந்து இப்பகுதிக்கு எடுத்து வரப்பட்டிருக்கலாம். கோவானூரிலும், குறிச்சி குளம் எனும் பெயரில் குளம் ஒன்று இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முத்தலூருக்கு செல்லும் முன்னே முத்தலூர் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் வெளிப்பரப்பில் அடுத்தடுத்து காணக்கிடைக்கின்றன. அகன்ற வாய்களைக்கொண்ட தாழிகளும், அதன் அருகே புதைக்கப்பட்டுள்ள சிறுசிறு பானைகளும் சிதைந்து காணப்படுகின்றன. அங்குமிங்குமாக 15-க்கும் மேற்பட்ட தாழிகள் காணக்கிடைக்கின்றன.

மேலும், தாழிகள் நிறைந்துள்ள பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு பழமையான பெருங்கற்கால கல்வெட்டு எச்சங்களும் பரவலாக காணக்கிடைக்கின்றன. இது மட்டுமின்றி, முதுமக்கள் தாழிகள், கல்வெட்டு எச்சங்கள் உள்ள இடம் இன்றும் இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது வியப்பாக உள்ளது.

தொல் எச்சங்கள்
தொல் எச்சங்கள்

முத்தலூரை ஒட்டிய நாடகமேடை பகுதியில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில், பல எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் வாசித்து பொருள் கொள்வதற்கு சிரமமாக உள்ளது. இந்த கல்வெட்டு, வேம்பத்தூரிலிருக்கும் சமுகம் தர்மம் என தொடங்குகிறது. மேலும் கல், மோட்சம் போன்ற சொற்கள் இடம் பெற்றிருப்பதால் இது நினைவுக்கல் என்பதும், மோட்சம் கருதி தர்மம் செய்த செய்தி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது. மேலும், இவ்விடத்திற்கு அருகில் வேம்பத்தூர் காரருக்கு பழமையான கட்டுமான நினைவிடம் ஒன்று இருப்பதாக இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் கள ஆய்வில் மூலம் தெரிவித்தார்.

இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் உள்ளது. இதில், வட்டவடிவிலான சக்கரம் போன்ற அமைப்பும் அதில் நான்கு ஆரங்களும் காணப்பெறுகின்றன. மொத்தத்தில் சித்தலூரும், முத்தலூரும் தொல்லெச்சங்கள் நிறைந்த சிற்றூராக காட்சியளிக்கிறது. இத்தொல்லெச்சங்களை சிதையாமல் பாதுகாக்க சிவகங்கை தொல்நடைக்குழு விரும்புகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in