மின்நிலையங்களைப் பாதுகாக்க 2 கம்பெனி துணை ராணுவம் வருகிறது:புதுச்சேரியில் என்ன நடக்கிறது?

மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிரான மக்களின் போராட்டம்.
மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிரான மக்களின் போராட்டம்.

மின் துறை ஊழியர்களின்  காலவரையற்ற  வேலை நிறுத்தத்தாலும்,  துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து ஊழியர்கள்  மின்சாரத்தைத் துண்டித்ததாலும் மின்தடை ஏற்பட்டு  புதுச்சேரி மாநிலம் முற்றிலுமாக நேற்று இரவு இருளில் மூழ்கியது. 

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகளை துவக்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில்  மின் துறையைத் தனியாருக்கு விடுவதற்கான  ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கு மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக தொடரும் வேலை நிறுத்தத்தால்  புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மின்சாரம் தடைபடுகிறது. பல பகுதிகள் நிரந்தரமாக இருளில் மூழ்கியுள்ளன.  இதனால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் இடையூறுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்களின் கோபம் எல்லை மீறி பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் நேற்று மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில்  அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி,  துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம்  இதுகுறித்து கலந்து பேசியுள்ளார். அதையடுத்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆனாலும் மின்துறை ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அவர்களும் அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 

இந்த நிலையில் மின் துறை ஊழியர்கள் சிலர்  நேற்று புதுச்சேரியில் உள்ள  துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்தனர். அதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.  இதையடுத்து அவசர ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,   "துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்" என்று எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது உள்ள நிலைமை சமாளிக்க மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனத்திலிருந்து 24 ஊழியர்கள் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மின் நிலையங்களுக்கு பாதுகாப்பளிக்க இரண்டு துணை ராணுவ கம்பெனி படையினரும் புதுச்சேரிக்கு வருகின்றனர்.மொத்தத்தில் மத்திய அரசின் மின்துறை தனியார் மயம் அறிவிப்பால் புதுச்சேரி மாநிலத்தில் மிகவும் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in