சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: அள்ளித்தந்தவரை ஆம்பூரில் அள்ளியது போலீஸ்

கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷ்.
கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷ். சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: அள்ளித்தந்தவரை ஆம்பூரில் அள்ளியது போலீஸ்
Updated on
1 min read

சென்னையில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்பட பலருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலையரங்கில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் கடந்த மாதம் 26-ம் தேதி சினிமா உட்பட பல்வேறு பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை அந்த தனியார் அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் செய்திருந்தார். இசை அமைப்பாளர் தேவா, நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி - சுதாகர் உடபட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலு விழாவுக்குச் செல்லாத நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வீடு தேடிச் சென்று வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்பட வேண்டிய கவுரவ டாக்டர் பட்டங்கள், தனியார் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் சார்பிலும் போலீஸில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் ஹரிஷ் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த ஹரிஷ் தலைமறைவானார். அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.இதற்கிடையே முன்ஜாமீன் கோரி ஹரிஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஆம்பூரில் பதுங்கி இருந்த ஹரிஷை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in