சிவன் வேடமிட்டு போராடியவர் கைது: பின்னணியில் காளி போஸ்டர் விவகாரமா?

சிவன் வேடமிட்டு போராடியவர் கைது: பின்னணியில் காளி போஸ்டர் விவகாரமா?

இந்து கடவுளான சிவன் வேடமிட்டு போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். லீலா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்படச் சர்ச்சையின் எதிரொலியால் வழக்குகள் பதிவாகி உள்ளன.

அசாம் அருகிலுள்ள நகாவ்னின் சமூக செயற்பாட்டாளராக இருப்பவர் பிரின்ச்சி போரா. இவர் கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக நகாவ்னில் தெருமுனை நாடகங்களை நடத்தினார். இதில் போரா, இந்துக்களின் கடவுள் சிவன் போல் வேடமிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். இவருக்கு பின்னால் பார்வதி வேடமிட்டு போராவின் சகசெயற்பாட்டாளரும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இவர்களது படங்களும், வீடியோ பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

இதையடுத்து அசாமின் இந்துத்துவா வாதிகள் இடையே போராவின் போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதில் இந்துக்களின் கடவுள்கள் போல் வேடமிட்டது அவர்களை அவமானப்படுத்துவதாகவும் கண்டித்தனர். இதனால், கவுகாத்தி போலீஸார் வேறுவழியின்றி, போராவை கைது செய்தனர். இந்த கைதிற்கும் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்புகளுடனான விமர்சனங்கள் கிளம்பின.

இப்பிரச்சினையில் தலையிட்ட பாஜக ஆளும் முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ‘தற்போதைய சூழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது மதநிந்தனை அல்ல. எனவே, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என தன் ட்விட்டரில் பதிவு செய்தார்.

இதையடுத்து, போரா கவுகாத்தி காவல்துறை போலீஸாரால் விடுதலை செய்யப்பட்டனர். பார்வதி வேடமிட்ட போராவின் சகா, சம்பவத்திற்கு பின் தலைமறைவாகி இருந்தார்.

இது குறித்து கவுகாத்தியின் அருகிலுள்ள நகாவ்ன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான லீனா டோலே கூறும்போது, ‘பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தினர் புகாரின் பேரில் போரா கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது இந்து மதநிந்தனை செய்ததாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதியை மீறியதாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளது. இவை ஜாமீன் தரக்கூடிய பிரிவுகள் என்பதால் விடப்பட்டார்’ எனத் தெரிவித்தார்.

இதுபோல், இந்து கடவுள்களின் வேடமிட்டு தெருமுனை நாடகங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவது புதிதல்ல, அதேபோல், ஹனுமர் உள்ளிட்ட இந்துக்கடவுள்களின் வேடத்தில் சிலர் தம் வறுமை காரணமாக யாசகம் கேட்பதும் வழக்கமே. எனினும், சமீபத்தில் தமிழரான லீலா மணிமேகலையின் ‘காளி’ படத்தின் சர்ச்சைக்குரிய சுவரொட்டி காரணமாகி விட்டது. இது, சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அசாமின் சிவன்-பார்வதி வேடமிட்டதும் கைதுக்குரியதாகி விட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in