வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்யவும்: டிஜிபி ஆபீஸை முற்றுகையிட்டவர்கள் கைது

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்யவும்: டிஜிபி ஆபீஸை முற்றுகையிட்டவர்கள் கைது

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்த முயன்ற 30க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபடும் தங்கள் சங்கத்தினரை கைது செய்யும் தமிழக காவல்துறையை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகே ஒன்றுக்கூடிய போராட்டக்காரர்கள் கோஷமிட்டவாறு அங்கிருந்து சென்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். இதனால் சிட்டி சென்டர் அருகே 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், போலீஸார் அமைத்த பேரிகார்டு தடுப்புகளை மீறி முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சரவணன், "சாதிவெறியோடு நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் ஒரு குற்றவாளியைகூட தமிழக காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. ஆனால் நியாயம் கேட்டு போராடும் எங்கள் சங்கத்தினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்கின்றனர். இந்த வழக்கில் போலீஸார் விசாரிக்கும் பாதி பேர் பட்டியலின மக்கள். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக மாற்ற போலீஸார் முயல்கின்றனர். நீரில் மலம் கலந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறை தயக்கம் காட்டுவது ஏன்?. காவல்துறையிலும் சாதி இருக்கிறதோ என்ற மனநிலை உருவாகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in