கந்துவட்டிக்கேட்டு கூலித் தொழிலாளியை தாக்கிய கல்லூரி மாணவன்: தப்பிக்க நினைத்து போலீஸில் சிக்கிய 5 பேர்

 கல்லூரி மாணவன் கைது
கல்லூரி மாணவன் கைது கந்துவட்டிக்கேட்டு கூலித் தொழிலாளியை தாக்கிய கல்லூரி மாணவன்: தப்பிக்க நினைத்து போலீஸில் சிக்கிய 5 பேர்

கூலித் தொழிலாளியிடம் கந்துவட்டிக் கேட்டுத் தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் உள்பட நான்குபேரைப் போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், சிவலார்குளம் பகுதியைச் சேர்ந்த முஜீத்குமார்(22) என்பவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் வட்டி கொடுத்து வந்தார். கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர்ந்து வட்டி கொடுத்து வந்தவர், திடீர் உடல்நலக்குறைவால் இருவாரங்கள் வேலைக்குச் செல்லாததால் வட்டி கொடுக்கவில்லை.

இதனால் நேற்று மாலை முஜீத்குமார் தொழிலாளி வீட்டிற்குப் போய் ஆபாச வார்த்தைகள் சொல்லி திட்டியுள்ளார். அப்போது அந்த தொழிலாளி, இரு ஆண்டுகள் முறையாக வட்டி கொடுத்து உள்ளேன். இப்போது உடல்நலக்குறைவால் வேலைக்குச் செல்லாததால் தான் இருவாரமாக வட்டி கொடுக்க முடியவில்லை எனச் சொல்லி உள்ளார். ஆனால் தொடர்ந்து அவரை முஜீத்குமார் ஆபாச வார்த்தைகளால் திட்டவே, இனியும் திட்டினால் கந்துவட்டிப் புகார் கொடுத்துவிடுவேன் என தொழிலாளி சொன்னார். இதனால் ஆத்திரம் அடைந்த முஜீத்குமார், உடனே தன் நண்பர்களான மருதம்புத்தூரைச் சேர்ந்த பத்திரகாளி, சிவலார்குளத்தைச் சேர்ந்த ஆனந்த், தன் தம்பியும், கல்லூரி மாணவருமான நந்தகுமார் ஆகியோரை அலைபேசியில் அழைத்தார். இவர்கள் அனைவரும் சேர்ந்து கொடூரமாக தொழிலாளியைத் தாக்கினர். ஒருகட்டத்தில் தொழிலாளி மயங்கிச் சரிந்தார்.

உடனே முஜீத்குமாரும், அவரது கூட்டாளிகளும் உடனே ஆலங்குளம் காவல்நிலையம் சென்றனர். அங்குபோய் தொழிலாளியிடம் வட்டி கேட்டுப் போனபோது அவர் தங்களைத் தாக்கியதாகப் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணைக்காகச் சென்றபோது தொழிலாளி வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார் விசாரித்தபோது, கந்துவட்டி கேட்டு நான்குபேரும் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கந்துவட்டி கேட்டுத் தொழிலாளியைத் தாக்கிய முஜீத்குமார், கல்லூரி மாணவர் நந்தகுமார் உள்பட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in