காஷ்மீர் மாணவர்களின் கல்விக்கு உதவும் ராணுவம்: கரை சேரும் 600 இளைஞர்கள்!

காஷ்மீர் மாணவர்களின் கல்விக்கு உதவும் ராணுவம்: கரை சேரும் 600 இளைஞர்கள்!

ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 600 மாணவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் பல்கலைக்கழகக் கல்வி பயில, சிறப்பு கல்வி உதவித் தொகை திட்டம் மூலம் உதவுகிறது ராணுவம். இந்தியத் தரைப்படையின் வடக்குப் பிரிவு இதற்கான முன் முயற்சிகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டிலும் இத்திட்டப்படி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிற மாநில பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் நிலையில், இம்முயற்சி தொடர்வது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

காப்புத்தொகை

ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் கல்வி, தொழில் – வேலைவாய்ப்புப் பயிற்சிக் கூடங்களை ஏற்கெனவே நடத்தி வருகிறது ராணுவம். நிதி உதவி வேண்டாம்; சொந்த செலவிலயே படிக்கிறோம் என்பவர்களையும் அனுமதிக்கிறது. மற்றவர்கள் காப்புத் தொகையாக ரூ.30,000 முன்பணம் செலுத்த வேண்டும். கல்விக் கட்டணம், தங்குமிடச் செலவு, உணவுக்கான செலவு, தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ராணுவமே செலுத்தும். படிப்பு முடிந்ததும் காப்புத்தொகை திருப்பித் தரப்பட்டுவிடும். கல்வியில் சிறந்த - உயர் கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயன்படும்.

கடந்த ஆண்டு ராஜஸ்தானின் மேவார் பல்கலைக்கழகத்தில் மட்டும் காஷ்மீரைச் சேர்ந்த 311 மாணவர்கள் பயின்றுள்ளனர். மேலும் பல கல்வி நிலையங்களை இதில் சேர்க்க முன்வந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அதில் இடர் ஏற்பட்டது. இப்போது நோய் பரவல் அச்சம் தணிந்து வாய்ப்புகள் பெருகியிருப்பதால் உதவிக்கான மாணவர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியிருக்கிறது ராணுவம்.

ஜம்மு, காஷ்மீர், லடாக் பிரதேசங்களின் கிராமத் தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்ட உறுப்பினர்கள், மக்கள் குழுவினர் மூலம் இந்த திட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு 600 இடங்களுக்கு இதுவரை 7,500 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. ஆகஸ்ட் 1 முதல் 3 வரையில், ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ தேர்வு நடந்தது. விண்ணப்பித்தவர்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள், 1,400 பேர் ஜம்மு பகுதியில் வசிப்பவர்கள், லடாக்கிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

‘சத்பாவனா' செயல்திட்டம்

ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்களை காஷ்மீரில் நிறுத்தி அப்பாவி மக்கள் ஒடுக்கப்படுவதாக விமர்சனங்கள் தொடரும் நிலையில், அதை முறியடிக்கவும் கல்வி, பொருளாதார வசதிகளில் பின்தங்கியுள்ள காஷ்மீரிகள் விரைவாக முன்னுக்கு வரவும் 1998 முதல் ‘சத்பாவனா’ செயல்திட்டம் என்ற முயற்சியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதில் காஷ்மீரிகளுக்குத் தேவைப்படும் கல்வி, மருத்துவ வசதிகளை ராணுவமே இலவசமாக அளிக்கிறது. மாநிலத்தின் கல்வி, சுகாதார அமைப்புகளுக்கும் உறுதுணையாகச் செயல்படுகிறது. கொந்தளிப்பான மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்கிறது. இதுவரை இந்த திட்டங்களுக்காக ராணுவம் 550 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது.

அமைதி நிலவ...

காஷ்மீரப் பகுதியில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மிகக் குறைவான பாடப்பிரிவுகளும் இடங்களும்தான் உள்ளன. எனவே உயர் கல்வி பயில, பிற மாநிலங்களுக்குச் செல்ல மாணவர்களை ஊக்குவிக்க ராணுவமே இந்த கல்வி உதவித்தொகை முயற்சியை எடுத்துள்ளது. இதனால் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பல்வேறு படிப்புகளைப் படித்தால் காஷ்மீரின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டாலே அமைதி நிலவும். தொழில் நிர்வாகம், மருந்தாளுமை, பொறியியல், சட்டம், விளையாட்டு அறிவியல் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதனால் வேலைவாய்ப்பும் விரைவில் ஏற்படும்.

ராணுவம் நல்லெண்ண முயற்சியாக 47 பள்ளிக்கூடங்களை நடத்துகிறது. அவற்றில் 27 காஷ்மீரப் பள்ளத்தாக்கில் உள்ளன.

எல்லைகளைக் காக்கத்தான் ராணுவம் காஷ்மீரில் இருக்கிறது, மக்களை ஒடுக்க அல்ல என்பது சத்பாவனா செயல்திட்டங்கள் மூலம் புரிய வைக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்குச் சென்று பயிலும் காஷ்மீர் பகுதி மாணவர்கள் இந்தியாவில் எத்தகைய கல்வி, வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதையும் அறிகின்றனர். எனவே, இம்முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதில் ஆச்சரியமில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in