
அருணாசல பிரதேசத்தின் மலைப்பகுதி ஒன்றில், இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள மிக்கிங் கிராமம் அருகே இன்று காலை 10.43 மணி அளவில், இந்திய ராணுவத்தின் ருத்ரா ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரில் ஐந்து பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. சீனா எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டுடிங் நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்திருக்கிறது. டுடிங் நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மிக்கிங் கிராமம் அமைந்திருக்கிறது. அதன் அருகே உள்ள சிக்கிங் பகுதியில்தான் விபத்து நடந்திருப்பதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மலைப்பகுதி கிராமமான மிக்கிங்குக்கு சாலை வசதிகள் கிடையாது. ஒரே ஒரு தொங்குபாலம் மட்டும் உள்ளது. மீட்புப் பணிகளுக்காகச் சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே, மீட்புக் குழுக்கள் மலை மீது ஏறி, விபத்து நடந்த இடத்துக்குச் செல்கிறார்கள். உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் உதவிவருகிறார்கள்.
அருணாசல பிரதேச மாநிலத்தில், இந்த மாதத்தில் மட்டும் நடந்திருக்கும் இரண்டவது ஹெலிகாப்டர் விபத்து இது. சமீபத்தில் தவாங் மாவட்டத்தில் சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் ஒரு விமானி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.