
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் ராணுவத்தில் சேர விரும்பிய 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். வயது அதிகமானதால் அக்னிபத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க இயலாத விரக்தியில் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கேதர் பால் ஓட்டப்பயிற்சிக்காக நேற்று அதிகாலையில் வீட்டை விட்டுச் சென்றார். ஆனால் பின்னர் அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இறந்து கிடந்தார். இது தொடர்பாகப் பேசிய பிசிகல் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் கிரிபால் சிங், "கேதர் பாலின் உடலைக் கண்டுபிடித்தோம், அவரின் தற்கொலைக் குறிப்பை மீட்டோம். அதில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியற்றதால் ராணுவத்தில் சேர முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்" என்று கூறினார்.
கேதர் பால் இராணுவத்தில் சேர விரும்பினார் என்றும், அதற்காக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நிறைய உடற்பயிற்சி செய்தார் என்றும் அவரின் நண்பர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாகப் பேசிய கேதர் பாலின் நண்பர் சோனு குர்ஜார், "கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆட்சேர்ப்பு நடத்தப்படவில்லை, அதற்குள், பால் போன்ற பல ராணுவ ஆர்வலர்களுக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர் ஜூன் 30, 2002 ல் பிறந்தார். அதே நேரத்தில் தற்போது அக்டோபர் 1, 2002 மற்றும் ஏப்ரல் 1, 2004 இடையில் பிறந்தவர்கள் மட்டுமே அக்னிபத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்" என்று கூறினார்.
அக்னிவீரர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பு 17 முதல் 21 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டது, முன்பு அதிகபட்ச வயது 23 ஆக இருந்தது.