பிரியாணி கேட்ட மனைவியை எரித்துக் கொன்ற கணவன்

பத்மாவதி,கருணாகரன்.
பத்மாவதி,கருணாகரன்.

பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெய் ஊற்றி கணவர் தீவைத்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் தாகூர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன்(75). இவரது மனைவி பத்மாவதி(65). இவர்களுக்கு மகேஸ்வரி(50), குமார்(46), ஷக்கிலா(44), கார்த்திக் (40) என நான்கு பிள்ளைகள் உள்ளனர். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான கருணாகரன், தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்கள் இருவரும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், பிள்ளைகள் வீட்டில் தங்க வைத்தாலும் அவர்களுடன் சண்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்து விடுவது வழக்கம். இதே போல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், இதனால் இருவரும் அடிக்கடி பேசாமலும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கருணாகரன் தனது மனைவி பத்மாவதிக்கு சரியாக சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. நேற்று இரவு கருணாகரன் மட்டும் பிரியாணி வாங்கி வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். அப்போது பத்மாவதி தனது கணவரிடம் தனக்கும் பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், வீட்டில் இருந்த மண்ணெண்ணைய்யை பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே பத்மாவதி தீயுடன் ஒடிவந்து கணவர் கருணாகரனை கட்டிப் பிடித்து கொண்டார். இதனால் இருவரும் தீயில் எரிந்து காயமடைந்தனர். இவர்களது வீட்டில் இருந்து புகைவருவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஒடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தீயில் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அயனாவரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அயனாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்மாவதி சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார். மேலும் தீக்காயமடைந்த அவரது கணவர் கருணாகரன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியாணி சண்டையில் மனைவியை கணவனே எரித்துக் கொலை செய்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in