மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் உரிமை பறிபோகிறதா?
நீட் நுழைவுத் தேர்வுக்கு திமுக அரசும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது மருத்துவப் படிப்புக்கான முழுமையான இடங்களையும் மத்திய அரசே நிரப்பும் என்ற அறிவிப்பு பேரதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை, இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. தனது வசமுள்ள கல்வி நிறுவனங்களின் இடங்களை முழுமையாக மத்திய அரசே நிரப்பிக்கொள்கின்றன. அதுபோல மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான 50 சதவீத இடங்களை மத்திய அரசும், 50 சதவீத இடங்களை மாநில அரசும் நிரப்பிக்கொள்கின்றன. இளநிலை மருத்துவப் படிப்பில் 15 சதவீத இடங்களை மத்திய அரசும், 85 சதவீத இடங்களை மாநில அரசும் நிரப்பிக்கொள்வதே தற்போதைய நடைமுறையாக உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வையும் மாநில அரசுகளே நடத்துகின்றன. இதில், மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டு விகிதாசாரத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான், மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வையும் மத்திய மருத்துவக் கலாந்தாய்வுக் குழுவே (எம்சிசி) நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை தடையின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி பல்வேறு நீதிமன்றங்கள் ஆணையிட்டதன் அடிப்படையில், அனைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் மத்திய அரசே நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாட்டில் தொடக்கமே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும், மருத்துவர்கள் சங்கங்களும் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. எனவே, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் எடுத்துரைக்கப்படும் என்றும், இதுகுறித்த சட்டரீதியான ஆட்சேபனைக் கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், “ஒன்றிய பாஜக அரசு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஏற்கெனவே மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநிலங்கள் தங்கள் கல்வி முறையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலோ அல்லது தாங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வின் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கையையும் தாங்களே நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மத்திய - மாநில அரசுகள் கடைபிடிக்கும் நடைமுறையே மிகவும் சிறப்பானது. அதைவிடுத்து அனைத்து இடங்களையும் மத்திய அரசே நிரப்ப முயன்றால் அது பல்வேறு குழப்பங்களையும், மாநிலங்களுக்கு பாதிப்புகளையும் உருவாக்கும். எதிர்காலத்தில் மாநிலங்களின் இடஒதுக்கீட்டையும் இது பாதிக்கும்.

தமிழ்நாட்டில் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் இங்கே பொது ஒதுக்கீட்டிலேயே சீட் வாங்க முடியும். மத்திய அரசே இடங்களை நிரப்பும் பட்சத்தில் இவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும். தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், அனைத்திந்திய ஒதுக்கீட்டு முறைக்குச் செல்லும் போது இது தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்கும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்வி வணிகமயமாகி விட்டது. எனவே இதற்கு ஒரே மாதிரியான சந்தையை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்கேற்பவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனையும் தாண்டி இப்போது மாநிலங்களிடம் உள்ள மருத்துவ சேர்க்கைக்கான உரிமையையும் பறிக்க நினைக்கிறார்கள். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்த செயலை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமல்ல. அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் 69 சதவீத செங்குத்து இட ஒதுக்கீடு மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத கிடைக்கோட்டு இட ஒதுக்கீடு என ஏராளமான இட ஒதுக்கீடுகள் உள்ளன. இவற்றை தமிழகத்தின் சமூக, கல்விச் சூழலை நன்றாக புரிந்தவர்களால் மட்டும் தான் செயல்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதால், மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களை விட குறைவாக இருக்கும். அதனால், அவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று சேர முயல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில அளவில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால் மட்டும் தான் அத்தகையவர்களைக் கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் வாய்ப்புள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு என்பது மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் மாநில அரசுகளின் உரிமையாகும். அதில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிட முடியாது. நீட் என்ற பெயரில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதியை தீர்மானிக்கும் உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தகட்டமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் உரிமையையும் மத்திய அரசு பறித்துக் கொண்டால், இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேரலாம். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மத்திய அரசின் இட ஒதுக்கீடே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒருபுறம் கூட்டாட்சி தத்துவம் பேசிக் கொண்டு படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது” என்று தெரிவித்துள்ளார்

மருத்துவம் பெரும் வணிகமாகிவிட்ட இன்றைய சூழலிலும் குக்கிராமங்களில், மலைப்பிரதேசங்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பெரும்பாலும் வறுமையான பின்புலத்திலிருந்து வரும் மருத்துவர்களே அந்த மக்களோடு மக்களாய் இருந்து சேவை செய்கிறார்கள். இவர்களெல்லாம் மருத்துவராக முடிந்தது ஒதுக்கீட்டினால்தான். அதற்கு எத்தகைய குந்தகம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் தங்களின் முக்கிய பொறுப்பு என்பதை மத்திய - மாநில அரசுகள் உணர்ந்து கொண்டால் நல்லது!