‘அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க உங்கள் ஓய்வூதியத்தை விட்டுத்தரத் தயாரா?’

மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பும் வருண் காந்தி
‘அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க உங்கள் ஓய்வூதியத்தை விட்டுத்தரத் தயாரா?’

முப்படைகளுக்கும் ஆள்சேர்ப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் அக்னிபத் திட்டத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பீலிபித் தொகுதி பாஜக எம்.பி-யான வருண் காந்தி.

தமிழில் அக்னிப் பாதை என்று அழைக்கப்படும் அக்னிபத் திட்டத்தின்படி, இந்திய ராணுவத்தில் சேரும் நபர் 4 ஆண்டுகள் மட்டுமே படைப்பிரிவுகளில் பணியாற்ற முடியும். அதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படாது; சராசரியாக 21,000 ரூபாய் சம்பளமாகப் பெறும் அக்னி வீரர்களுக்கு, 4 வருடங்களுக்குப் பின்னர் 12 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஓய்வூதியம் கிடையாது. இதில் சேருபவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு 46,000 அக்னிவீரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், ‘குறைந்த காலம் மட்டுமே பணிபுரியும் அக்னி வீரர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்கள் எனில், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் இந்த வசதி? அக்னி வீரர்கள் ஓய்வூதியம் பெறும் வகையில் எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்களான நாம் ஏன் நமது ஓய்வூதியத்தை விட்டுத்தரக் கூடாது?’ என இன்று இந்தியில் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் வருண் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தத் திட்டத்துக்கு எதிராக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்களை ‘ஜிகாதிகள்' என்றும் ‘காலிஸ்தான் தீவிரவாதிகள்’ என்றும் விமர்சித்த பிஹார் பாஜக எம்எல்ஏ ஹரீஷ்பூஷன் தாக்கூரை வருண் காந்தி கண்டித்தார். முதலில் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு பின்னர் அதைப் பற்றிச் சிந்திப்பது சரியா என்றும் மத்திய அரசை விமர்சித்திருந்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துவந்த வருண், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ட்வீட் செய்து பரபரப்பைக் கிளப்பினார்.

மோடி - அமித் ஷா கூட்டணியின் காலத்தில் இருவருக்கும் பாஜகவில் முக்கியத்துவம் குறைந்தது. வருண் காந்திக்கு மோடி அமைச்சரவையில் ஒருமுறைகூட இடமளிக்கப்படவில்லை. சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டப்போதுகூட தனக்கு அதில் இடமளிக்கப்படும் என வருண் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. அதேபோல், மோடியின் முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவிவகித்த மேனகாவுக்கு, அடுத்த முறை அமைச்சர் பதவி கிட்டவில்லை. இதையடுத்து, பாஜகவுக்குள் இருந்தபடியே அக்கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார் வருண் காந்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in