மனப்பால் குடிக்கிறாரா மம்தா?

காங்கிரஸுக்கு எதிராகக் களமாடுவதன் பின்னணி...
மனப்பால் குடிக்கிறாரா மம்தா?

சமீபத்தில் மும்பை சென்றிருந்த மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் இறங்கியிருக்கிறார். அதே மும்பையில், இளம் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றிய மம்தா, இந்தியாவின் தலைமைப் பொறுப்புக்கு வரும் தகுதி தனக்கு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இவற்றின் மூலம் மம்தாவின் பிரதமர் கனவு பட்டவர்த்தனமாகியிருக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருக்கின்றனவா?

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்த என்னென்ன அஸ்திரங்களைப் பயன்படுத்த முடியுமோ, அத்தனை அஸ்திரங்களையும் பாஜக பயன்படுத்தியது. திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிப் பலர் பாஜகவில் சேர்ந்தனர். ஆனால், தேர்தலில் எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்தார் மம்தா. இன்றைக்கு, பாஜக சார்பில் மேற்கு வங்கத்தில் போட்டியிட ஆட்களைத் தேட வேண்டும் என்கிற அளவுக்கு, பலரும் தீதி கட்சிக்குத் திரும்பிவிட்டனர்.

இந்தத் தெம்பில், திரிணமூலின் எல்லையை விஸ்தரிக்கும் கனவில் இருக்கும் மம்தா திரிபுரா, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் அதற்கான வேலைகளிலும் மும்முரமாகிவிட்டார். திரிபுரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வியடைந்தாலும், திரிணமூலின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. போதாக்குறைக்கு, காங்கிரஸிலிருந்து பலர், திரிணமூலுக்கு இழுக்கப்பட்டுவருகின்றனர். மேகாலயாவில் இருந்த 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணமூலுக்குத் தாவிவிட்டனர். அதில், முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவும் அடக்கம். கோவா முன்னாள் முதல்வர் லூசினோ பெலேரோ, திரிணமூலுக்குச் சென்று மாநிலங்களவை எம்பியாகவும் ஆகிவிட்டார்.

இவற்றையெல்லாம் வைத்து, மேற்கு வங்க எல்லையையும் தாண்டி தனது செல்வாக்கு வளர்வதாக மம்தா முடிவெடுத்துவிட்டார். எல்லாம் சரி, வங்கப் புலி தேசியப் புலியாகிவிட முடியுமா?

மும்பையில் சரத் பவாருடன் மம்தா...
மும்பையில் சரத் பவாருடன் மம்தா...

பிரதமர் பதவியை நோக்கிய பாதையில் முதலில் அகற்ற வேண்டியது காங்கிரஸைத்தான் என்று மம்தா கருதுகிறார். அதனால் தான் நாடாளுமன்றத்துக்குள் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்தாலும், நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து குரல் கொடுக்க திரிணமூல் முன்வரவில்லை. 3-வது அணியை உருவாக்குவதற்கான முன்தயாரிப்புடன் தான், அவர் மும்பை புறப்பட்டுச் சென்றார். அவர் காங்கிரஸைக் குறிவைத்து ஏதேனும் பேசுவார் என கணித்திருந்த, மகாரஷ்டிர அமைச்சரும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான நவாப் மலிக், “காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணி அமையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனாலும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாரை அருகில் வைத்துக்கொண்டே, காங்கிரஸை வாரினார் மம்தா.

இன்றைய தேதியில் பாஜகவுக்குப் பிரதான எதிரியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டால்தான், தேசிய அரசியலில் எடுபடலாம் என்பது மம்தாவின் எண்ணம். அவர் எப்படி வேண்டுமானாலும் கருதிக்கொள்ளலாம். ஆனால், பாஜக, தேசிய அளவில் முக்கிய எதிரியாக நினைப்பது காங்கிரஸைத்தான். பல மாநிலங்களிலும் காங்கிரஸை எதிர்த்துத்தான் பாஜக களம் காண்கிறது. காங்கிரஸ் அல்லாத இந்தியா என்று பாஜக முன்வைக்கும் முழக்கத்துக்குக் காரணம், தேசிய அளவில் இன்னமும் தனது ஆதரவுத் தளத்தைக் காங்கிரஸ் இழக்காததுதான். பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியிலும் பங்கு வகிக்கிறது. தமிழகத்திலும் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கிறது.

இத்தனையையும் தாண்டி, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க முயல்வதன் மூலம், கிட்டத்தட்ட பாஜகவின் பாதைக்கே மம்தாவும் வருகிறார். பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸிடம் திராணி இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உணர்த்த விரும்புகிறார். மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பின்னரும் திரிணமூலுக்காகத் தொடர்ந்து களமாற்றிவரும் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸிலிருந்து பலரைத் திரிணமூலுக்குத் திருப்பிவிடுவதுடன், காங்கிரஸ் தலைமையையும் ராகுலையும் விமர்சித்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்...

திரிணமூலின் அதிகாரபூர்வ நாளிதழான ‘ஜாகோ பங்ளா’வில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஒரு கட்டுரையில், காங்கிரஸ் ஆழ்ந்த உறைநிலைக்குச் சென்றுவிட்டதாக விமர்சிக்கப்பட்டது. அதாவது, அந்த வெற்றிடத்தை மம்தா நிரப்புவார் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன என்பது அந்தக் கட்டுரையின் சாராம்சம்.

இதனிடையே, பிரதமர் மோடிக்கும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கும் இடையிலான இணக்கமான போக்கை, திரிணமூல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், திடீரென மம்தாவை அதானி சந்தித்ததும் மம்தா எதிர்ப்பாளர்கள் மத்தியில் பேசுபொருளானது. குறிப்பாக, திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா அதானிக்கு எதிராக எழுதிய ட்வீட்டுகளை வைத்து அவரை வறுத்தெடுக்கிறார்கள் காங்கிரஸாரும் இடதுசாரிகளும். கூடவே, சாரதா சிட்பண்ட் முறைகேடு முதல், நிலக்கரிச் சுரங்க ஊழல் வரை பல வழக்குகளை அஸ்திரங்களாக வைத்து மத்திய அரசு மம்தாவுக்கு அழுத்தம் கொடுப்பதால்தான், அவர் காங்கிரஸுக்கு எதிராகக் களமாடுகிறார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஒருகாலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர்தான் மம்தா என்றும் காங்கிரஸார் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பிரதமர் மோடியுடன் மம்தா...
பிரதமர் மோடியுடன் மம்தா...

மோடியை ஒரு பக்கம் அரசியல் எதிரியாகச் சொல்லிக்கொண்டாலும், இன்னொரு வகையில் மோடியின் அரசியல் பாதையில்தான் மம்தா நடைபோடுகிறார். மம்தாவைப் போலவே மோடியும் தொடர்ந்து 3 முறை மாநில முதல்வராக இருந்தவர். மோடி பாணியிலேயே தொழில் துறையினர் மாநாட்டையும் நடத்துகிறார். ஆனால், இருவருக்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மோடி தேசிய அரசியலுக்கு வருவதற்கு முன்பே, பாஜக தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிரான பிரதானக் கட்சியாகத் தன்னை நிறுவிவிட்டது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பையும் ருசித்துவிட்டது. கூடவே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலும் இருந்தது. இருக்கிறது. மம்தாவுக்கு அப்படியெல்லாம் எந்த வலுவான பின்புலமும் இல்லை.

சொல்லப்போனால், மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியில்தான் பாஜக தனது செல்வாக்கைப் பெருமளவில் வளர்த்துக்கொண்டிருக்கிறது. அக்கட்சியின் வாக்கு சதவீதமும் அதிகரித்திருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களில் வென்றதை வைத்துப் பார்த்தால், தேசிய அரசியல் என்று வரும்போது மம்தாவைவிடவும் மோடிக்கு ஆதரவளிக்க மேற்கு வங்க மக்களே விரும்புவதை உணர முடிகிறது. வட மாநிலங்களில் அக்கட்சிக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் செல்வாக்கு இல்லை. இந்தி பேசும் மாநிலங்களில் வேற்று மொழிக்காரர்களுக்கு வரவேற்பு இருக்காது என்பதும் வரலாற்று உண்மை.

1996 மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் வெறும் வெறும் 46 இடங்களில் மட்டுமே வென்றிருந்த நிலையில், அக்கட்சியின் சார்பில் தேவ கவுடா பிரதமரானார். அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் ஆதரவளித்தன. அப்படி ஒரு வாய்ப்பு 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு அமையாதா என மம்தா எதிர்பார்க்கிறார். ஆனால், மம்தாவைப் போலவே மாநில அரசியலில் செல்வாக்கு கொண்டிருந்த ஜெயலலிதாவாலேயே தேசிய அரசியலில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம்.

ஒருவேளை, மம்தாவின் முயற்சியால் 3-வது அணி அமைத்துவிட்டால் என்ன ஆகும்? பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரிந்து நிற்பது கடைசியில், பாஜகவுக்குத்தான் சாதகமாக முடியும். அதைத்தான் மம்தா விரும்புகிறாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in